சதம் விளாசிய ஷுப்மன் கில்... இந்திய கேப்டனின் 54 ஆண்டுகால சாதனை முறியடிப்பு!
இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 180 ரன்கள் முன்னிலை பெற்றது. 180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, நான்காம் நாள் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 300 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 28 ரன்கள், கருண் நாயர் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம் கடந்தார். அவர் 84 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும்.
இதனையடுத்து, ஜோடி சேர்ந்த கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக் கேப்டன் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 58 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். சிறப்பாக விளையாடிய கேப்டன் கில் சதம் விளாசி அசத்தினார்.
இதனையடுத்து, அதிக ரன்கள் குவித்த (இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து) வீரர் என்ற சாதனையை கேப்டன் ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
முன்னதாக, கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் 344 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது.
54 ஆண்டுகளாக தொடர்ந்த இந்த சாதனையை தற்போது ஷுப்மன் கில் முறியடித்துள்ளார்.