இரண்டே நாளில் சாதனை காலி… அபிஷேக் சர்மாவின் ரெக்கார்டை முறியடித்த இஷான் கிஷன்
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி, ரசிகர்களுக்கு அதிரடி விருந்தாக அமைந்தது.
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி, ரசிகர்களுக்கு அதிரடி விருந்தாக அமைந்தது. 209 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் வெற்றிக்கு, இளம் வீரர் இஷான் கிஷன் விளையாடிய அதிரடி இன்னிங்ஸ் முக்கிய காரணமாக அமைந்தது. வெறும் இரண்டு நாள்களுக்கு முன்பு உருவான சாதனையை உடைத்ததுடன், அவர் புதிய மைல்கல்லையும் எட்டினார்.
முந்தைய போட்டியில் அபிஷேக் சர்மா 22 பந்துகளில் அரைசதம் அடித்து இந்திய அணிக்காக புதிய சாதனை படைத்திருந்தார். ஆனால் அந்த சாதனை நீடிக்காமல், இப்போட்டியில் இஷான் கிஷன் 21 பந்துகளில் அரைசதம் கடந்து, நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேட் ஹென்றி வீசிய ஆறாவது ஓவரின் நான்காவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பியதன் மூலம் இந்த சாதனையை அவர் பதிவு செய்தார்.
பவர் பிளே ஓவர்கள் முடிவில் இஷான் கிஷன் 23 பந்துகளில் 56 ரன்கள் குவித்திருந்தார். இது டி20 வரலாற்றில் பவர் பிளே ஓவர்களுக்குள் ஒரு இந்திய வீரர் எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன், 2025ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அபிஷேக் சர்மா எடுத்த 58 ரன்களே முதலிடத்தில் இருந்தது.
இஷான் கிஷன் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்து 32 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது இன்னிங்ஸில் 11 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். ஒரு புறம் அவர் ரன்களை குவித்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்தன. கடந்த போட்டியின் நாயகன் அபிஷேக் சர்மா, தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார். ஜேக்கப் டஃபி பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.
துவக்க வீரர் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸர் அடித்த உடனே, மேட் ஹென்றி பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து 6 ரன்களில் வெளியேறினார். பின்னர் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். சிவம் துபே 16 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை எளிதாக்கினார். இந்திய அணி 15.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றியை பதிவு செய்தது.
இதற்கு முன் பேட்டிங் செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. ரச்சின் ரவீந்திரா 26 பந்துகளில் 44 ரன்களும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ரன்களும் குவித்தனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
