டி20 உலகக் கோப்பை 2026: இந்தியாவை தென்னாப்பிரிக்கா வீழ்த்தும்... கிரேம் ஸ்மித்!

முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கேப்டன் கிரேம் ஸ்மித், வரவிருக்கும் 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்த வேண்டும் எனத் தெளிவாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை 2026: இந்தியாவை தென்னாப்பிரிக்கா வீழ்த்தும்... கிரேம் ஸ்மித்!

முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கேப்டன் கிரேம் ஸ்மித், வரவிருக்கும் 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்த வேண்டும் எனத் தெளிவாக விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெறவிருக்கும் இந்த உலகக் கோப்பைக்கு முன்னோடியாக, தற்போது நடைபெறும் SA20 தொடர் தென்னாப்பிரிக்க அணிக்கு மிகச் சிறந்த பயிற்சிக் களமாக அமையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து கோப்பையைத் தட்டியெடுத்தது. இதன் மூலம் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாம்பியன்களாக உயர்ந்தனர். ஆனால், ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் அவர்கள் இன்னும் “சோக்கர்ஸ்” (தொடர்ந்த தோல்விகள்) என்ற பெயரிலிருந்து விடுபட முடியவில்லை.

குறிப்பாக, 2024 டி20 உலகக் கோப்பை இறுதியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியிடம் தென்னாப்பிரிக்கா தோல்வியைத் தழுவியது. இதை நினைவு கூர்ந்த ஸ்மித், “அந்த இறுதியில் நாங்கள் இந்தியாவை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

டெஸ்ட் வெற்றி குறித்து அவர் கூறுகையில், “இந்தியாவின் மண்ணில் சுற்றுப்பயணம் செய்வது எப்போதும் கடினம். அந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் அவ்வளவு ஆதிக்கம் செலுத்தியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டெஸ்ட் அணி ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறது. டெம்பா பாவுமா, சுக்ரி கான்ராட் போன்றோர் சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளனர்” என்றார்.

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் தென்னாப்பிரிக்காவிடம் திறமையான வீரர்கள் இருப்பதாகவும், “இந்தியாவில் ஸ்பின்னை எதிர்கொள்ளும் அளவுக்கு மத்திய வரிசையில் போதுமான தரம் உள்ளது. எனவே, ஒரு உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு வெகு தொலைவில் இல்லை” என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய அணியைப் பற்றி அவர் கூறுகையில், “இந்தியாவின் திறமையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. இது அவர்களுக்கு சொந்த மண்ணில் நடக்கும் உலகக் கோப்பை. கௌதம் காம்பீர் மற்றும் மூத்த வீரர்களுக்கு இடையே இந்திய கிரிக்கெட்டில் சுவாரஸ்யமான மாற்றம் தெரிகிறது. இந்தியா குறைந்தபட்சம் அரையிறுதிக்குக் கூட தகுதி பெறாவிட்டால், அது எனக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கும்” என்றார்.

இறுதியாக, SA20 தொடர் குறித்து அவர் கூறுகையில், “உலகக் கோப்பைக்குச் செல்லும்போது, சவாலான சூழலில் விளையாடிய அனுபவத்துடன் செல்வது முக்கியம். SA20 அதற்கான சிறந்த வாய்ப்பு. எங்கள் வீரர்கள் எப்படி ஒருங்கிணைவார்கள், பயிற்சியாளர் சுக்ரி மற்றும் ஐடன் எந்த அணியுடன் இந்தியாவுக்குச் செல்வார்கள், எப்படி களம் அமைப்பார்கள் – இவை அனைத்தும் முக்கியம். அதை முன்கூட்டிக் கணிக்க முடியாது. ஆனால், இந்தத் தளம் வீரர்கள் தயாராவதற்கு மிகச் சிறப்பானது” என்று கூறினார்.