வாகனத்தின் மேலே இருந்தபோது அபாயம் தெரியவில்லையா? – விஜய்யிடம் சிபிஐ அடுக்கடுக்கான கேள்வி

கரூரில் நடைபெற்ற விஜய் பங்கேற்ற பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், விஜய் இன்று இரண்டாவது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதற்காக அவர் நேற்று தனி விமானத்தில் டெல்லி சென்றார்.

வாகனத்தின் மேலே இருந்தபோது அபாயம் தெரியவில்லையா? – விஜய்யிடம் சிபிஐ அடுக்கடுக்கான கேள்வி

அவ்வளவு பெரிய கூட்டத்திற்குள் வாகனத்தை செலுத்தச் சொன்னது ஏன், வாகனத்தின் மேலே நின்றபோது கீழே நிலைமை மோசமானது உங்களுக்குத் தெரியவில்லையா என்ற கேள்விகளை தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் முன்வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்குத் தொடர்பாக, இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே அவர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது அதிகாரிகள் அவரிடம் தொடர்ச்சியாக பல கேள்விகளை எழுப்பினர். சில கேள்விகளுக்கு விஜய் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.

விசாரணையின் போது, “அவ்வளவு கூட்டத்தினூடே ஏன் வாகனத்தை இயக்கச் சொன்னீர்கள்? வாகனத்தின் மேலே இருந்த உங்களுக்கு அபாய நிலைமை தெரியவில்லையா? கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், “ஏழு மணி நேரம் தாமதமாக சென்றது ஏன்? நிலைமை மோசமடைந்த பின்னரும் ஏன் பேச்சை நிறுத்தவில்லை? கண் எதிரே நடந்த கூட்ட நெரிசலை கவனிக்கவில்லையா?” என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதற்கு பதிலளித்த விஜய், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு தொடர்பான விஷயங்களில் தான் தமிழக காவல்துறையை நம்பியிருந்ததாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விஜய்யின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றப்பத்திரிகை தேர்தலுக்கு முன்பாக, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூரில் நடைபெற்ற விஜய் பங்கேற்ற பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், விஜய் இன்று இரண்டாவது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதற்காக அவர் நேற்று தனி விமானத்தில் டெல்லி சென்றார்.

முன்னதாக, ஜனவரி 12ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய்யிடம் சுமார் ஏழு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு, அவரது பதில்கள் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ பதிவாகவும் பதிவு செய்யப்பட்டன. அந்த விசாரணையில் விஜய் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் கோரிக்கையை ஏற்று, பொங்கல் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் ஆஜராக சிபிஐ அறிவுறுத்தியிருந்தது. அதன்படி அவர் நேற்று மாலை டெல்லி புறப்பட்டு, இன்று காலை 10.30 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணை முடிந்த பின்னர், இன்று இரவு சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்கனவே 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடமும் சிபிஐ வாக்குமூலம் பெற்றுள்ளது.

மேலும், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐஜி ஜோஷி நிர்மல் குமார் ஆகியோரிடமும் இரண்டாம் கட்ட விசாரணை நடைபெறலாம் என கூறப்படுகிறது. விஜய்யின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியையும் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பிரசாரத் திட்டங்களை வகுத்ததோடு, அனுமதிக்கப்பட்ட பாதையை விட்டு வாகனத்தை கூட்டத்தினூடே செல்லுமாறு அறிவுறுத்தியவர் இவர்தான் எனவும் கூறப்படுகிறது.