பராசக்தி X விமர்சனம்: சிவகார்த்திகேயன்–ரவி மோகன் ஜோடி எப்படி? எப்படி இருக்கு படம்?
சிவகார்த்திகேயன் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம் இன்று (ஜனவரி 10, 2026) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம் இன்று (ஜனவரி 10, 2026) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நிலையில், இந்தப் படம் அவரது கரியரில் மற்றொரு முக்கியமான திருப்புமுனையாக எதிர்பார்க்கப்பட்டது. படத்தில் ரவி மோகன் முதன்முறையாக வில்லனாக நடித்திருப்பதும், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் படம் 25 இடங்களில் சென்சார் குழுவின் திருத்தங்களுக்குப் பிறகு திருத்தப்பட்ட பதிப்பில் வெளியாகியுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் அன்கட் வெர்ஷன் ஏற்கனவே திரையிடப்பட்டு, பார்வையாளர்களின் கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியுள்ளன.
எக்ஸ் (முன்னைய ட்விட்டர்) தளத்தில் படத்தின் முதல் பாதி பார்த்தவுடன் ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களைப் பகிர்ந்துள்ளனர். ஒரு பார்வையாளர், "முதல் பாதி 5-க்கு 1.5 மதிப்பெண். ஜெயம் ரவி, வசனம், இடைவேளை காட்சிகள் நல்லா இருக்கு. ஆனா கதை இல்லாமை, திரைக்கதை மோசம், இயக்கம் பலவீனம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், "படம் கதைக்குள் நேரடியா நுழையுது. ஆனா மெதுவா நகருது. தேவையில்லா காதல் கதை பெரும்பாலும் சலிப்பை ஏற்படுத்துது. இடைவேளை ஓகே. இரண்டாம் பாதிக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
எனினும், சிலர் உற்சாகமாகவும் பதிவிட்டுள்ளனர். "அடிபொலி இடைவேளை காட்சி! ரவி, எஸ்கே ஃபுல் ஃபார்மில். ஸ்ரீலீலா க்யூட். அதர்வா முக்கியமான பாத்திரத்தில் இருக்காரு. இது பராசக்தி பொங்கல்!" என்று ஒருவர் கொண்டாடியுள்ளார். இதற்கு நேர்மாறாக, "முதல் பாதி ஓகே... இரண்டாம் பாதி இழுவை, சொதப்பல்" என்று வேறு சிலர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜிவி பிரகாஷ் குமார் உருவாக்கியுள்ள பின்னணி இசை, குறிப்பாக "எஸ்கே 25" என்று திரையில் தோன்றும் டைட்டில் கார்டில் அட்டகாசமாக இருப்பதாகவும் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மொத்தத்தில், பராசக்தி படத்தின் முதல் பாதி குறித்து சமூக ஊடகங்களில் கலவையான விமர்சனங்கள் நிலவுகின்றன. சிவகார்த்திகேயனின் நடிப்பும், ரவி மோகனின் வில்லன் அவதாரமும் பாராட்டப்பட்டாலும், கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தின் இரண்டாம் பாதி எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
