புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வெறுப்பு பதிவுகள்: பிரித்தானியருக்கு 18 மாதங்கள் சிறை
குறித்த வழக்கின் போது, அப்பதிவுகள் வெறும் 33 பார்வைகளையே பெற்றதாகவும், அதனால் எந்தவிதமான நேரடி பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவரது சட்டத்தரணி வாதிட்டார்.
புலம்பெயர்ந்தோருக்கு எதிராக சமூக ஊடகங்களில் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக, பிரித்தானியர் ஒருவர் 18 மாதங்கள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிnrம்பரில், ஜெர்மனியின் Magdeburg நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சந்தையில், நபர் ஒருவர் மக்கள் கூட்டத்துக்குள் காரை வேண்டுமென்றே செலுத்திய தாக்குதலில் 06 பேர் உயிரிழந்ததுடன், 338 பேர் காயமடைந்தனர். அந்த சம்பவத்துக்கு எதிராக ஜெர்மனி முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தப் பின்னணியில் சமூக ஊடகத்தில் வெளியான ஒரு பதிவுக்குக் கீழ், Luke Yarwood (வயது 36) என்பவர், “புலம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் ஹோட்டல்களுக்குச் சென்று அவற்றை எரியுங்கள்” எனக் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வெளியிட்ட மற்றொரு பதிவில், “இது பிரித்தானியர்கள் ஒன்றுகூடும் நேரம்; வன்முறையும் கொலையும் தான் தீர்வு” எனவும், புலம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் ஹோட்டல்களையும், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளையும் இலக்காக்க வேண்டும் எனவும் அவர் எழுதியிருந்தார்.
மேலும், வெளிநாட்டவர்கள், குறிப்பாக இஸ்லாமியர்கள் மற்றும் ஆங்கிலம் பேசாதவர்கள் மீது வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் பல பதிவுகளை அவர் வெளியிட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதன் அடிப்படையில், அவருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குறித்த வழக்கின் போது, அப்பதிவுகள் வெறும் 33 பார்வைகளையே பெற்றதாகவும், அதனால் எந்தவிதமான நேரடி பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவரது சட்டத்தரணி வாதிட்டார். ஆனால் நீதிபதி அந்த வாதத்தை நிராகரித்து, இவ்வகை பதிவுகள் சமூகத்தில் இனவெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை எனக் குறிப்பிட்டார். மேலும், அதே காலகட்டத்தில் அவர் வெளியிட்ட சில பதிவுகள் 800 பார்வைகள் வரை பெற்றிருந்ததையும், ஒரு பதிவுக்கான அவரது பதில் ஒரு மில்லியன் பார்வைகளை எட்டியிருந்ததையும் சுட்டிக்காட்டி, தண்டனை நியாயமானது என நீதிமன்றம் தெரிவித்தது.
