கிரீன்லாந்து விவகாரம்: எதிர்ப்பு தெரிவித்த நாடுகளுக்கு வரி விதிக்கலாம் என ட்ரம்ப் எச்சரிக்கை

இந்த வரிகள் எந்த நாடுகளை பாதிக்கும் அல்லது எந்த சட்ட அதிகாரத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் என்பது குறித்து ட்ரம்ப் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.

கிரீன்லாந்து விவகாரம்: எதிர்ப்பு தெரிவித்த நாடுகளுக்கு வரி விதிக்கலாம் என ட்ரம்ப் எச்சரிக்கை

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது லட்சியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள சுயாட்சி பிரதேசமான கிரீன்லாந்து தொடர்பாக சில நாடுகள் ஒத்துழைக்க மறுத்தால், அவர்கள்மீது வரி விதிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.

இந்த வரிகள் எந்த நாடுகளை பாதிக்கும் அல்லது எந்த சட்ட அதிகாரத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் என்பது குறித்து ட்ரம்ப் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. இருப்பினும், இந்த யோசனைக்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மட்டுமல்லாமல், பிற நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவுக்குள்ளேயே கூட, கிரீன்லாந்தை கைப்பற்றும் எண்ணம் குறித்து அரசியல் வட்டாரங்களில் சந்தேகக் கருத்துகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், அமெரிக்க காங்கிரசைச் சேர்ந்த இரு கட்சியினரும் அடங்கிய குழு ஒன்று சமீபத்தில் கிரீன்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. அங்குள்ள நிலைமைகளை நேரில் அறிந்து, உள்ளூர் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழு, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மற்றும் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த குழுவின் தலைவர் மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் கிறிஸ் கூன்ஸ், உள்ளூர் மக்களின் கருத்துக்களை கேட்டு, பதற்றத்தை குறைக்கும் நோக்கில் அந்த தகவல்களை வொஷிங்டனுக்கு எடுத்துச் செல்லவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என்றும், அதை “எளிதான வழியிலோ அல்லது கடினமான வழியிலோ” அமெரிக்கா பெற்றே தீரும் என்றும் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்தக் கருத்துகள் தீவை வாங்குவதற்கான முயற்சியையோ அல்லது வலுக்கட்டாயமாக கைப்பற்றும் சாத்தியத்தையோ சுட்டிக்காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வளங்கள் நிறைந்த கிரீன்லாந்து, அதன் புவியியல் இருப்பிடத்தின் காரணமாக பாதுகாப்பு ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக பார்க்கப்படுகிறது. அங்கு அமெரிக்கா ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளது. டென்மார்க்குடன் உள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் கூடுதல் துருப்புகளை நிறுத்தவும் அமெரிக்காவிற்கு அனுமதி உள்ளது.

இருப்பினும், கிரீன்லாந்தை கைப்பற்றும் எந்த முயற்சியும் நேட்டோ கூட்டணியின் ஒற்றுமைக்கு ஆபத்தாக அமையும் என டென்மார்க் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த விவகாரம் உலக அரசியலில் புதிய பதற்றத்தை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.