ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடித்த ஜாக்பாட்: இந்தியா 'ஏ' அணி கேப்டனாக அறிவிப்பு; ஆஸ்திரேலியா 'ஏ' தொடரில் முக்கியப் பங்கு
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், இந்தியா 'ஏ' அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு முதல் தரப் போட்டிகளுக்கான இந்தியா 'ஏ' அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம், அவருக்கு மீண்டும் டெஸ்ட் அணிக்குள் நுழைவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற நீண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை. 30 வயதான இவர், கடைசியாக 2024-ல் இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில்தான் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்தார். அதன்பிறகு, தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் தொடர்களில் அவர் புறக்கணிக்கப்பட்டார்.
கடந்த சீசனில் துலீப் டிராபியில் சுமாராக ஆடத் தொடங்கினாலும், ரஞ்சி டிராபியில் தனது ஃபார்மை மீட்டெடுத்தார். ரஞ்சி டிராபியில் 5 போட்டிகளில் விளையாடிய அவர், இரண்டு சதங்கள் மற்றும் தனது முதல் இரட்டைச் சதம் உட்பட 480 ரன்கள் குவித்தார். டெஸ்ட் மற்றும் டி20 அணிகளில் இருந்து புறக்கணிக்கப்பட்ட போதிலும், ஒருநாள் போட்டிகளில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா வென்றதற்கு அவரது பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், ஐபிஎல் தொடரிலும் முதன்முறையாக 600-க்கும் அதிகமான ரன்களை, 175-க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டில் குவித்து அசத்தினார்.
இந்த இந்தியா 'ஏ' அணியில், இங்கிலாந்தில் முழங்கால் காயமடைந்த ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியும் இடம்பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட கே.எல். ராகுல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர், செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கும் இரண்டாவது போட்டியில் அணியுடன் இணைவார்கள். இது, உள்நாட்டு டெஸ்ட் சீசனுக்கு முன்பு அவர்களுக்கு ஒரு நல்ல பயிற்சியாக அமையும்.
மேலும், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்த பிரசித் கிருஷ்ணா, சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் தமிழக வீரர் என். ஜெகதீசன் ஆகியோரும் இந்தத் தொடருக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புதிய முகங்களுக்கு வாய்ப்பு: இந்தத் தொடரில் சில புதிய இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விதர்பா அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபே, டெல்லி பேட்ஸ்மேன் ஆயுஷ் பதோனி மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களான யாஷ் தாக்கூர், குர்னூர் ப்ரார் ஆகியோர் இந்தியா 'ஏ' அணியில் முதன்முறையாக இடம்பிடித்துள்ளனர்.
இந்தியா 'ஏ' vs ஆஸ்திரேலியா 'ஏ' போட்டி அட்டவணை: இந்தத் தொடரின் இரண்டு போட்டிகளும் லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளன.
முதல் போட்டி: செப்டம்பர் 16-19, 2025
இரண்டாவது போட்டி: செப்டம்பர் 23-26, 2025
ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான முதல் தரப் போட்டிகளுக்கான இந்தியா 'ஏ' அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், என். ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், கலீல் அகமது, மானவ் சுதர், யாஷ் தாக்கூர். ( கே.எல். ராகுல், முகமது சிராஜ் இரண்டாவது போட்டியில் இணைவார்கள்).
