பரபரப்பு உச்சத்தில்: U-19 உலகக் கோப்பையில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் இன்று நேரடி மோதல்
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி U-19 உலகக் கோப்பை தொடரில், இந்தியா U-19 மற்றும் பங்களாதேஷ் U-19 அணிகள் இன்று (17) பலப்பரீட்சை நடத்துகின்றன.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி U-19 உலகக் கோப்பை தொடரில், இந்தியா U-19 மற்றும் பங்களாதேஷ் U-19 அணிகள் இன்று (17) பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி சிம்பாப்வேயின் புலவாயோ நகரிலுள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
இந்த U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் ‘B’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்கா U-19 அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வலுவான தொடக்கத்தை பெற்றது.
இந்திய U-19 அணி அண்மையில் விளையாடிய 17 போட்டிகளில் 14 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளதால், இன்றைய ஆட்டத்திலும் அந்த வெற்றிப் பாதையைத் தொடரும் நம்பிக்கையில் உள்ளது. இதனால் அணியின் தன்னம்பிக்கை உச்சத்தில் காணப்படுகிறது.
மற்றுபுறம், பங்களாதேஷ் U-19 அணி அஸிசுல் ஹக்கீம் தலைமையில் களமிறங்குகிறது. துணைத் தலைவராக ஜவாத் அப்ரார் உள்ளார். இந்த இருவரும் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற U-19 உலகக் கோப்பைக்கு பின்னர் இளையோருக்கான ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளனர். இதனால் பங்களாதேஷ் அணியும் இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே சமீப காலமாக கிரிக்கெட் ரீதியில் போட்டி மனப்பான்மை அதிகரித்துள்ள நிலையில், இன்றைய இந்த மோதல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
