ஆண்மை இழக்கும் அபாயம்.. இந்திய அணியின் இளம் வீரருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை... டி20 தொடரில் இருந்து விலகல்
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் திலக் வர்மா, திடீரென ஏற்பட்ட டெஸ்டிகுலர் டார்ஷன் (Testicular Torsion) என்ற மருத்துவ அவசர நிலை காரணமாக உடனடி அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதன் காரணமாக, ஜனவரி 21 முதல் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் முதல் மூன்று டி20 பன்னாட்டுத் தொடர் ஆட்டங்களில் (ஜனவரி 21, 25 மற்றும் 27) அவர் பங்கேற்க முடியாமல் போயுள்ளது.

சம்பவம், விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ராஜ்கோட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்தது. அப்போது திலக்குக்கு திடீரென கடுமையான விதைப்பை வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் கோகுல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட ஸ்கேன் மூலம் டெஸ்டிகுலர் டார்ஷன் உறுதிப்படுத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடி அறுவை சிகிச்சை அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டது.
பிசிசிஐ அதிகாரி ஒருவர் இது குறித்து விளக்கமளிக்கையில், “எங்கள் மருத்துவ நிபுணர்கள் அறுவை சிகிச்சையை ஒப்புக்கொண்டனர். திலக் வெற்றிகரமான சிகிச்சையை முடித்து, தற்போது நலமாக இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
டெஸ்டிகுலர் டார்ஷன் என்பது, விதைப்பையைச் சுற்றியுள்ள கயிறு போன்ற அமைப்பு திடீரென சுழன்று, அதற்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை முற்றிலும் தடுக்கும் நிலையாகும். இது கடுமையான வலி, வீக்கம், குமட்டல் மற்றும் வாந்தியை உண்டாக்கும். இந்த நிலையில் 6 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், விதைப்பைக்கு நிரந்தர சேதம் ஏற்பட்டு, அதை அகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். இது ஆண்மைத் திறனை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதால், உடனடி மருத்துவ நடவடிக்கை மிகவும் முக்கியம்.
இந்த நிலை பொதுவாக பதின்ம வயதுகளில் அதிகம் காணப்பட்டாலும், எந்த வயதிலும் – காயம், தூக்கத்தில் கூட – ஏற்படலாம். பெரும்பாலும் ‘பெல் கிளாப்பர் டிபார்மிட்டி’ (Bell Clapper Deformity) என்ற பரம்பரை கோளாறுடன் இது தொடர்புடையது.
தற்போது திலக் வர்மா முழுமையாக குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டாலும், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் அவர் பங்கேற்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.