இந்திய அணிக்கு 41 ஆண்டுகளில் இப்படி நடந்ததே இல்லை.. மோசமான வரலாற்று சாதனையை தவிர்க்குமா இந்தியா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துவிட்ட இந்திய அணி அக்டோபர் 25 சிட்னியில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துவிட்ட இந்திய அணி அக்டோபர் 25 சிட்னியில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.
பெர்த் மற்றும் அடிலெய்டில் அடைந்த தோல்விகளால், தொடரை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டதுடன், கடைசிப் போட்டியிலும் தோல்வியடைந்தால், அது 41 ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா சந்திக்கும் முதல் 'ஒயிட்வாஷ்' ஆக இருக்கும்.
1984க்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே தொடரின் மூன்று போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்ததில்லை. 2020 பிப்ரவரிக்குப் பிறகு, அந்நிய மண்ணில் இந்திய அணியின் ஒருநாள் தொடர் செயல்பாடுகள் மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளன.
வெளிநாடுகளில் 13 இருதரப்பு ஒருநாள் தொடர்களில் விளையாடியுள்ள இந்தியா, தற்போதைய ஆஸ்திரேலிய தொடரையும் சேர்த்து 7 தொடர்களில் தோல்வியைத் தழுவியுள்ளது.
இதில், 2020-ல் நியூசிலாந்துக்கு எதிராகவும், 2021-22-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் என இரண்டு முறை 'ஒயிட்வாஷ்' தோல்வியை சந்தித்துள்ளது. தற்போது சிட்னியிலும் தோல்வியுற்றால், இது கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா சந்திக்கும் மூன்றாவது 'ஒயிட்வாஷ்' ஆகப் பதிவாகும்.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு மிகவும் மோசமாகவே உள்ளது. இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடன் இதுவரை 19 முறை மோதியுள்ள இந்திய அணி, வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணி 16 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இது இந்திய அணிக்கு பெரும் சவாலாக அமையும்.
இந்திய அணியின் விராட் கோலியின் மோசமான ஃபார்ம், அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுடன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் போட்டிக்குத் திரும்பிய அவர், இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து 'டக் அவுட்' ஆகி பெரும் ஏமாற்றம் அளித்தார்.
சிட்னி மைதானத்திலும் கோலியின் ஒருநாள் போட்டி சாதனைகள் சிறப்பாக இல்லை என்பதுடன், அவர் விளையாடியுள்ள நான்கு ஒருநாள் போட்டிகளில், அவரது அதிகபட்ச ஸ்கோர் வெறும் 21 ரன்கள் மட்டுமே.
இந்தக் கடைசிப் போட்டி, தொடரின் முடிவைத் தீர்மானிக்காவிட்டாலும், இந்திய அணியின் கௌரவத்தையும், மோசமான வரலாற்று சாதனையை தவிர்க்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
