சாதனைகள் முக்கியமல்ல… தோனிக்கு நடந்ததே எனக்கும் நடக்கிறது – ரசிகர் கோஷம் குறித்து விராட் கோலி உருக்கம்

தற்போதைய கட்டத்தில் சாதனைகள் அல்லது தனிப்பட்ட மைல்கற்கள் குறித்து நான் சிந்திப்பதே இல்லை என்று இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

சாதனைகள் முக்கியமல்ல… தோனிக்கு நடந்ததே எனக்கும் நடக்கிறது – ரசிகர் கோஷம் குறித்து விராட் கோலி உருக்கம்

தற்போதைய கட்டத்தில் சாதனைகள் அல்லது தனிப்பட்ட மைல்கற்கள் குறித்து நான் சிந்திப்பதே இல்லை என்று இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ரசிகர்கள் அதிகமாக கோஷம் எழுப்புவது, முன்பு மகேந்திர சிங் தோனிக்கு நடந்ததைப் போலவே இருப்பதாகவும், அது அவுட்டாகி பெவிலியன் திரும்பும் வீரருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் மனம் திறந்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. நியூசிலாந்து நிர்ணயித்த 301 ரன்கள் இலக்கை இந்திய அணி 49 ஓவர்களில் எட்டியது. இந்தப் போட்டியில் 93 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

போட்டிக்குப் பிறகு பேசிய கோலி, இந்த விருதை எத்தனையாவது முறையாக பெறுகிறேன் என்பதே நினைவில் இல்லை என்று கூறினார். தான் வெல்லும் கோப்பைகளை கூர்கயானில் இருக்கும் தன் அம்மாவிடம் அனுப்பி வைப்பதாகவும், கோப்பைகளை சேகரிப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் பகிர்ந்தார். தனது பயணத்தை திரும்பிப் பார்க்கும் போது, அது ஒரு கனவு நனவான தருணம் போல இருப்பதாகவும் கோலி தெரிவித்தார்.

தன் திறமைகளை நன்றாக அறிந்திருந்ததால்தான், இந்த நிலையை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டதாக அவர் கூறினார். தான் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கடவுள் தன்னை ஆசீர்வதித்திருக்கிறார் என்றும், தனது கிரிக்கெட் பயணத்தை நினைத்து தனக்கே பெருமை ஏற்படுகிறது என்றும் கோலி உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

இப்போது சாதனைகள் குறித்து எந்த சிந்தனையும் இல்லை என்று கூறிய கோலி, முதல் பேட்டிங் செய்திருந்தால் இன்னும் அதிரடியாக விளையாட முயற்சித்திருப்பேன் என்றும் விளக்கினார். ஆனால் சேஸிங்கின் போது இலக்கு தெளிவாக இருக்கும் நிலையில், சூழலுக்கு ஏற்ப விளையாடுவதே சரியானது என்று நினைத்ததாகவும் கூறினார். அணி எளிதாக வெற்றி பெற வேண்டிய இடத்துக்கு கொண்டு செல்வதே தனது ஒரே நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆட்டத்தின் போக்கு கடினமாக மாறும் போது கவுன்டர் அட்டாக் செய்ய முயற்சிப்பேன் என்றும், எந்த பந்தில் விக்கெட் விழும் என்பது யாருக்கும் தெரியாது என்பதால், தேவையற்ற டிஃபென்சிவ் ஆட்டமும், அளவுக்கு மீறிய அட்டாக்கும் சரியல்ல என்றும் கோலி கூறினார். ரோஹித் சர்மா அவுட்டான பிறகு, முதல் 20 பந்துகளில் தாக்குதல்மிகு ஆட்டத்தை தேர்வு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தான் பேட்டிங் செய்ய வரும்போது ரசிகர்கள் அதிகமாக கோஷம் எழுப்புவதை உணர்வதாகவும், உண்மையில் அது தனக்கு சோகத்தை அளிப்பதாகவும் கோலி கூறினார். ஏனெனில், ஒரு வீரர் அவுட்டாகி பெவிலியன் செல்லும் தருணத்தில், மற்றொருவருக்காக ரசிகர்கள் கோஷம் எழுப்புவது சரியானதல்ல என்றும், இதே அனுபவம் முன்பு தோனிக்கும் ஏற்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

ரசிகர்களின் ஆர்வத்தையும் அன்பையும் புரிந்து கொள்வதாக கூறிய கோலி, தனது முழுக் கவனமும் ஆட்டத்தின் மீது இருக்க வேண்டும் என்றும், தனது விளையாட்டின் மூலம் மக்களின் முகத்தில் சிரிப்பை காண்பதே தன்னுடைய மிகப்பெரிய மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.