“மிகவும் வேதனையாக இருந்தது… மண்ணீரல் என்னவென்று அப்போதுதான் தெரிந்தது” – ஸ்ரேயாஸ் ஐயர்
சிட்னியில் சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், அதன் பிறகு இந்தியாவுக்கு திரும்பி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் தனது மறுவாழ்வு பயிற்சியை தொடங்கினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான Shreyas Iyer, கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ஏற்பட்ட கடுமையான காயம் குறித்து முதன்முறையாக விரிவாக பேசினார். அந்த தொடரில், டைவ் அடித்து கேட்ச் பிடிக்க முயன்றபோது அவருக்கு உடலில் பலத்த அடிபட்டு, உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு மண்ணீரலில் (spleen) காயம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சிட்னியில் சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், அதன் பிறகு இந்தியாவுக்கு திரும்பி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் தனது மறுவாழ்வு பயிற்சியை தொடங்கினார். தொடர்ந்து விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடரிலும் அவர் இடம் பெற்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் 49 ரன்கள் அடித்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இன்று நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த போட்டிக்கு முன் ராஜ்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், அந்த காயம் தந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். “மிகவும் வேதனையாக இருந்தது. உண்மையிலேயே கடும் வலி. மண்ணீரல் நமது உடலில் ஒரு முக்கியமான உறுப்பு என்பதே எனக்கு அப்போதுதான் தெரிந்தது. அந்த காயம் எவ்வளவு தீவிரமானது என்பதையும் நான் உணரவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாள்தான், இது ஒரு பெரிய காயம் என்பதை புரிந்துகொண்டேன். உண்மையில், அன்றுதான் ‘மண்ணீரல்’ என்ற வார்த்தையையே புதிதாக கற்றேன்” என்று அவர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “இந்த காயம் எனக்கு வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க ஒரு இடைவெளியை கொடுத்தது. நான் ஒரே இடத்தில் அமைதியாக உட்காரும் நபர் இல்லை; எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருக்க விரும்புவேன். ஆனால் இந்த காயம், என்னை சற்று மெதுவாக செல்லவும், உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுக்கவும் கற்றுக்கொடுத்தது. எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்ய முடியாது. ஆறு முதல் எட்டு வாரங்கள் முழுமையான ஓய்வு தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறினர். அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றினேன். அதனால் மீண்டும் களத்திற்கு திரும்பும் பயணம் எனக்கு சீராகவும் எளிதாகவும் அமைந்தது” என்று தெரிவித்தார்.
