முதல் அணியாக அரையிறுதிக்கு சென்ற இந்தியா.. 55 ரன்களில் சுருண்டது இலங்கை
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேற இலங்கை அணி இந்த ஆட்டத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த நாட்டு ரசிகர்கள் நம்பினர்.
 
                                ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அணியாக இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 33 வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் இலங்கை அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலப் பரீட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் என்ன நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டி தெரியாமல் இலங்கை செய்த மாபெரும் தவறாக இது பார்க்கப்படுகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேற இலங்கை அணி இந்த ஆட்டத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் நம்பினர்.
ஆனால் அதனை அனைத்தும் இந்திய வீரர்கள் பொய் ஆக்கினர். கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் கிட்டத்தட்ட கடைசி வரை நின்று 56 பந்துகளில் 82 ரன்களும் எடுத்து இந்திய அணிக்கு மிகப்பெரிய அடித்தளத்தை கொடுத்தனர்.
எனினும் கே எல் ராகுல் 21 ரன்களும் சூரியகுமார் யாதவ் 12 ரன்களும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இறுதியில் ஜடேஜா 35 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது.ஆட்டத்தின் முதல் பந்திலே இலங்கை அணியின் நிசாங்கா பும்ராவின் ஓவரில் பெவிலியன் திரும்பினார்.
இதன் பிறகு இரண்டாவது ஓவரில் கருணரத்னே, சிராஜ் ஓவரில் டக் அவுட் ஆனார். சிராஜை கண்டாலே இலங்கை அணியின் கால்கள் பரதநாட்டியம் ஆடியது.
சிராஜ் ஓவரை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணி வீரர்கள் சீட்டுக்கட்டில் சரிவது போல் விக்கெட்டுகள் சரிந்தன. கேப்டன் குசல் மெண்டிஸ் ஒரு ரன்னிலும் சமர விக்ரமா டக் அவுட் ஆகியும் சிராஜ் பந்தில் வெளியேறினர்.
இதன்பிறகு முகமது சமி கைக்கு பந்து சென்றது அவர் தம் வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அசலங்கா ஒரு ரன்னிலும், துஷன் ஹேமந்தா டக் அவுட்டாகி வெளியேற இலங்கை அணி 14 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
துஸ்மந்தா சமீரா ஷமி ஓவரில் டக் அவுட்டானார். இன்னும் அந்த அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலா மேத்யூஸ் மட்டும் போராடி 12 ரன்கள் சேர்க்க இலங்கை அணி 55 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 302 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது.
முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். விளையாடிய 7 போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி 14 புள்ளிகள் பெற்று முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தோல்வியினால் இலங்கை அணி உலக கோப்பை தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.
இலங்கை அணியில் 5 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகி வெளியேறி இருக்கிறார்கள் ஒரே ஒரு வீரர் மட்டும் தான் இரட்டை இலக்கம் ரன்களை தொட்டிருக்கிறார்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






