பேட்டை சுழற்றிய ஷானகா அதிரடி...கடைசியில் ஏற்பட்ட திருப்பம்!

இலங்கை அணி நிசங்காவை தொடக்கத்திலேயே இழந்தாலும், குசால் மெண்டிஸ் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு வெற்றி இலக்கை விரட்டுவதற்கான சரியான அடித்தளத்தை அமைத்தார்.

Oct 8, 2023 - 02:38
பேட்டை சுழற்றிய ஷானகா அதிரடி...கடைசியில் ஏற்பட்ட திருப்பம்!

இலங்கை அணி நிசங்காவை தொடக்கத்திலேயே இழந்தாலும், குசால் மெண்டிஸ் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு வெற்றி இலக்கை விரட்டுவதற்கான சரியான அடித்தளத்தை அமைத்தார்.

ஒரு கட்டத்தில் முதல் இன்னிங்ஸில் மார்கிரம் படைத்த அதிவேக உலகக் கோப்பை சதம் என்ற சாதனையை மெண்டிஸ் இரண்டாவது இன்னிங்ஸிலேயே முறியடித்துவிடுவாரோ என்ற எண்ணம் எழுந்தது. 

42 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த அவரை ரபாடா வீழ்த்தினார். சமரவிக்ரமா, தனஞ்ஜெயா டி சில்வா அடுத்தடுத்து ஏமாற்றியதால், ஆட்டம் ஒருபக்கம் ஆனது.

அசலங்கா நம்பிக்கையுடன் விளையாட, கேப்டன் ஷானகா ஃபார்ம் இல்லாமல் களத்தில் நேரத்தை செலவிட்டு வந்தார். அசலங்காவும் அரை சதம் அடிக்க, கடைசி 20 ஓவர்களில் டி20 ஆட்டமாக விளையாடினால் சிறப்பான சேஸிங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அசலங்காவும் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், முழுப் பொறுப்பும் ஷானகாவிடம் இறங்கியது.

45 பந்துகளில் 31 ரன்களுக்கு விளையாடி வந்த ஷானகா, 37-வது ஓவரில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளை தொடர்ச்சியாக விளாசினார். இந்த ஓவருக்குப் பிறகு அரை சதத்தைக் கடந்து 51 பந்துகளில் 54 ரன்கள் என்ற நிலையை அடைந்தார். 

தொடர்ந்த பேட்டை சுழற்றிய ஷானகா, மகாராஜ் பந்தைத் தவறவிட்டு கால்காப்பில் வாங்கி ஸ்டம்புகளை இழந்தார்.

பந்துவீச்சாளரான ரஜிதா கடைசி நேரத்தில் வினோதமான ஷாட் மூலம் சிக்ஸர்களை அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். இவர் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரபாடா கடைசி விக்கெட்டாக பதிரனாவை போல்ட் செய்தார். ஆட்டம் முடிந்தது.

இலங்கை தோல்வியடைந்தாலும்கூட 326 ரன்களை எடுத்துவிட்டது. தென்னாப்பிரிக்காவின் மோசமான ஃபீல்டிங்குக்கு இலங்கை நன்றி தெரிவிக்க வேண்டும்.

இந்த ஆடுகளத்தில் எந்தவொரு இலக்கும் நிச்சயமில்லாதது என்பதை இந்த ஆட்டம் வெளிப்படுத்துகிறது. இலங்கையிடம் விக்கெட் இருந்திருந்தால், இலக்கை அடைந்திருப்பதற்கான வாய்ப்பு இருந்தது.

இந்த ஆட்டத்தில் மொத்தமாக 748 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையில் ஓர் ஆட்டத்தில் எடுக்கப்பட்ட ரன் இது என்கிற சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 31 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன. 3 சிக்ஸர்கள் கூடுதலாக விளாசப்பட்டிருந்தால், ஒரு உலகக் கோப்பை ஆட்டத்தில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள் என்ற சாதனையும் முறியடிக்கப்பட்டிருக்கலாம்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!