அக்சர், ரிங்கு இருந்தும் ஏன் ஆயுஷ் பதோனி? வாஷிங்டன் சுந்தர் இடமாற்றம் குறித்து பயிற்சியாளர் விளக்கம்

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக ஓய்வில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இடத்திற்கு ஆயுஷ் பதோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அக்சர், ரிங்கு இருந்தும் ஏன் ஆயுஷ் பதோனி? வாஷிங்டன் சுந்தர் இடமாற்றம் குறித்து பயிற்சியாளர் விளக்கம்

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக ஓய்வில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இடத்திற்கு ஆயுஷ் பதோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்வு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் கேள்விகளையும் எழுப்பிய நிலையில், அதற்கான காரணத்தை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்ஷு கோட்டக் விளக்கியுள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டியின் போது வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்ததால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, பதிலாக ஆயுஷ் பதோனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடும் ஆயுஷ் பதோனி, ஃபினிஷர் ரோலில் பெரிய ஹிட்டராகவோ, முக்கிய பவுலராகவோ இதுவரை அதிகமாக கவனம் ஈர்க்கவில்லை. தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரிலும் அவரது செயல்பாடு பெரிதாக பேசப்பட்டதில்லை. இதனால், அக்சர் படேல், ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் இருக்கும் நிலையில், ஆயுஷ் பதோனி எப்படி இந்திய அணிக்குள் வந்தார் என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து சித்தான்ஷு கோட்டக் பேசுகையில், ஆயுஷ் பதோனி டெல்லி அணிக்காக நீண்ட காலமாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும், இந்திய ‘ஏ’ அணிக்காகவும் விளையாடிய அனுபவம் அவருக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். பொதுவாக எந்த அணியும் ஐந்து முழு நேர பவுலர்களுடன் களமிறங்குவதில்லை. கடந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு காயம் ஏற்பட்ட போது, பிளேயிங் லெவனில் கூடுதல் பவுலர் இல்லையெனில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதனால், 4 முதல் 5 ஓவர்கள் வரை பவுலிங் செய்யக்கூடிய ஒரு ஆல்ரவுண்டரை தேடியதாகவும், அந்தத் தேவைக்கேற்பவே ஆயுஷ் பதோனி தேர்வு செய்யப்பட்டதாகவும் கோட்டக் விளக்கம் அளித்தார். கடந்த சில மாதங்களாக பதோனி அனைத்து போட்டிகளிலும் பவுலிங் செய்யத் தொடங்கியுள்ளதாகவும், பயிற்சியின் போது 8 முதல் 10 ஓவர்கள் வரை தொடர்ந்து பவுலிங் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆஃப் ஸ்பின்னரான ஆயுஷ் பதோனி கேரம் பால், ஆர்ம் பால் போன்ற மாற்றங்களையும் கற்றுள்ளதால், வாஷிங்டன் சுந்தர் இல்லாத சூழலில் ஒரு பயனுள்ள மாற்று வீரராக அவர் கருதப்படுகிறார். மேலும், லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த போது கம்பீர், ஆயுஷ் பதோனியை அந்த அணியில் தேர்வு செய்திருந்ததும், அவரது தற்போதைய இந்திய அணித் தேர்வுக்கு மறைமுக காரணமாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.