உடைந்து போன தோனி.. உறைந்த ரசிகர்கள்.. நிசப்தமான மைதானம்... நடந்தது என்ன?
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணி மந்தமாக விளையாடியது.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்காக போராடிய நிலையில், தோனி களத்தில் இருந்ததால் சிஎஸ்கே அணி எப்படியும் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், அந்த ஓவரின் முதல் பந்திலேயே அவர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தால் அதை நம்ப முடியாமல் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது . ஏற்கெனவே கடைசி ஓவரில் தோனி சில முறை 20 ரன்களுக்கும் அதிகமாக எடுத்திருக்கிறார் என்பதால், அவர் இந்த முறையும் அணியை வெற்றி பெற வைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸின் ஷிம்ரோன் ஹெட்மையர் பிடித்த கேட்சால் அவர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணி மந்தமாக விளையாடியது.
ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்ததை அடுத்து ஆட்டத்தின் வேகம் மேலும் குறைந்தது. அதன் பின் தோனி களத்திற்கு வந்தார். கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. கடைசி ஓவரை ராஜஸ்தான் ராயல்ஸின் சந்தீப் ஷர்மா வீசினார்.
முதல் பந்தை அவர் வைடு-ஆக வீசினார். இரண்டாவது பந்து வைடு புல்டாஸ் ஆக வீசப்பட்டது. இது சற்று ரிஸ்க்கான ஷாட் என்றாலும் தோனி அதை தனது சக்தியை கொடுத்து அடித்தார். ஆனால், திடீரென ஷிம்ரோன் ஹெட்மையர் தரைக்கு அருகே சென்று அபாரமாக அந்த கேட்சை பிடித்தார்.
அத்துடன் ஒட்டுமொத்த மைதானமும் நிசப்தமாக மாறியது. தோனி தான் அவுட் ஆனதை நம்ப முடியாமல் சில வினாடிகள் அதிர்ச்சியுடன் பார்த்த பின்னர் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்து இருந்த நிலையில் இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் தோனி சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றுக் கொடுப்பார் என காத்திருந்த சிஎஸ்கே ரசிகர்கள் உடைந்து போனார்கள்.
அதன் பின்னர், களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜேமி ஓவர்டன் சிஎஸ்கே அணியை காப்பாற்றுவார்களா என பார்த்தபோது அதுவும் நடக்கவில்லை.
ஜேமி ஓவர்டன் ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி இரண்டு பந்துகளிலும் இரண்டு சிக்ஸர்களை அடிக்க வேண்டும் என்ற நிலையில் அவரால் மொத்தம் நான்கு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஓவர்டன் நான்கு பந்துகளில் 11 ரன்களை எடுத்திருந்தார்.
ரவீந்திர ஜடேஜா 22 பந்துகளை 32 ரன்கள் எடுத்து ஆடுகளத்தில் இருந்தார். தோனி 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து இருந்தார். முன்னதாக வந்த பேட்ஸ்மேன்கள் நிறைய பந்துகளை வீணடித்ததுதான் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் சிஎஸ்கே அணியால் 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.