காயம் காரணமாக 2ஆவது டெஸ்டில் சுப்மன் கில் நீக்கம்: ரிஷப் பண்ட் முதல் முறையாக டெஸ்ட் கேப்டன் – சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ய வேண்டிய சூழலில் இருக்கும் இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ய வேண்டிய சூழலில் இருக்கும் இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கழுத்து தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த கேப்டன் சுப்மன் கில், கவுஹாத்தியில் நடைபெறவுள்ள இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது, முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் கில்லுக்கு திடீரென கழுத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலி அதிகரித்ததால் அவர் ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆகி மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் மருத்துவ சிகிச்சை பெற்ற அவர், அந்தப் போட்டியின் மீதமிருந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.
நேற்றே பிசிசிஐ, கில் அணியுடன் கவுஹாத்தி பயணம் செய்து வருவதாகவும், அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. எனினும், முழுமையான குணமடைவு இன்னும் காலம் எடுக்கும் காரணத்தால், கில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு கிடைப்பதில்லை என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
கில்லின் விலகலால், துணை கேப்டனான விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக கேப்டன்சிப் பொறுப்பை ஏற்கிறார். முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த சூழலில், அவரது வழிநடத்தல் அணிக்கு புதிய உற்சாகத்தை தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுப்மன் கில்லின் இடத்தை நிரப்ப இளம் இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்டில் அணித்தேர்வு காரணமாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் காட்டிய திறமையைப் பார்க்கும்போது, இந்த வாய்ப்பை அவர் சிறப்பாகப் பயன்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. முதல் போட்டியில் இந்திய பேட்டிங் வரிசை தடுமாறிய நிலையில், சுதர்சனின் வருகை மிடில் ஆர்டருக்கு வலு சேர்க்கும் என நம்பப்படுகிறது.
முதல் டெஸ்டில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்திய அணி, இந்த இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. புதிய கேப்டன், புதிய வீரர் ஆகிய மாற்றங்களுடன் இந்திய அணி நவம்பர் 22 அன்று கவுஹாத்தியில் களமிறங்குகிறது.
