இலங்கைக்கு உதவி கரம் நீட்டிய பிசிசிஐ – ‘தித்வா’ புயல் நிவாரணத்துக்காக கூடுதல் டி20 போட்டிகள்!
இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா, ஜனவரி 2, 2026 அன்று உறுதிப்படுத்தினார். முன்னதாக டிசம்பர் 2025-இல் இரண்டு டி20 போட்டிகள் மூலம் நிதி திரட்ட இந்தியா முயற்சித்தது.
2025 இறுதியில் இலங்கையை தாக்கிய ‘தித்வா’ புயல், 2004 சுனாமிக்குப் பிறகு அந்நாட்டின் மிக மோசமான இயற்கை பேரழிவாக பதிவானது. வரலாறு காணாத மழையால் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். வீடுகள், சாலைகள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புகள் பெரும் சேதமடைந்தன.
இந்த நெருக்கடி நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மீண்டும் தனது நட்புக்கரத்தை நீட்டி உள்ளது. 2026 ஆகஸ்ட்டில் இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் – அது முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகளை மட்டுமே கொண்டிருந்தது – இலங்கை நிவாரண நிதிக்காக கூடுதல் டி20 போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்த முடிவை, இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா, ஜனவரி 2, 2026 அன்று உறுதிப்படுத்தினார். முன்னதாக டிசம்பர் 2025-இல் இரண்டு டி20 போட்டிகள் மூலம் நிதி திரட்ட இந்தியா முயற்சித்தது. ஆனால், “தொலைக்காட்சி உரிமத்தை ஏற்பாடு செய்ய போதிய நேரம் கிடைக்கவில்லை” என சில்வா விளக்கமளித்தார்.
இப்போது மீண்டும் பிசிசிஐ எடுத்த முயற்சி, இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் ஆறுதலாக உள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும், பிசிசிஐ மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளை நடத்தி, இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு நிதி உதவி செய்தது. அந்த வருவாய், அப்போது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
இது தான் இந்தியா – நெருக்கடி நேரங்களில் நண்பர்களுக்கு உதவ முன்வரும் உணர்வுபூர்வமான பாரதம். தற்போது இலங்கை வெள்ள நிவாரணப் பணிகளுக்கான நிதியை ஈட்ட, பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் சொந்த மண்ணிலான டி20 தொடரிலிருந்து கிடைக்கும் வருவாயையும் எஸ்எல்சி ஒதுக்க திட்டமிட்டுள்ளது.
