இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விரிசல்? ஐபிஎல் காரணமா? வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்!
இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடருக்கு சில மாதங்கள் முன்பிருந்து வீரர்களை தேர்வு செய்து வந்தது. குறிப்பாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போதே இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு சிக்கல் இருந்தது.
2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மோசமான தோல்விகளை சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில், அந்த அணியில் விரிசல் இருக்கலாம் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் இயான் மார்கன், மைக்கேல் வான் போன்றோர் கூறி இருந்தனர்.
அதன் பின்னணியில் சம்பள ஒப்பந்த விவகாரம் இருக்கலாம் என கூறப்பட்டு வந்தது. அந்த சம்பள ஒப்பந்தப் பிரச்சனைக்கு ஆரம்பப் புள்ளியே ஐபிஎல் அணிகள் தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடருக்கு சில மாதங்கள் முன்பிருந்து வீரர்களை தேர்வு செய்து வந்தது. குறிப்பாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போதே இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு சிக்கல் இருந்தது.
பல முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்று இருந்தனர். பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி போன்றோர் ஓய்வு பெற்ற நிலையில் தங்கள் ஓய்வில் இருந்து மீண்டு வந்து அணியில் இணைந்தனர்.
அவர்கள் ஓய்வு பெற மறைமுகமான காரணம் ஐபிஎல் தான். தற்போது ஐபிஎல் அணிகள், இந்தியாவில் மட்டுமல்லாது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இன்டர்நேஷனல் டி20 தொடர், தென்னாப்பிரிக்கா டி20 தொடர் ஆகியவற்றிலும் அணிகளை சொந்தமாக வைத்துள்ளன.
பல ஐபிஎல் அணிகளும், தங்கள் ஐபிஎல் அணியில் இடம் பெற்று இருக்கும் அதே வீரர்கள் மற்ற நாட்டு டி20 தொடர்களிலும் தங்கள் அணியிலேயே இடம் பெற வேண்டும் என விரும்புகின்றன.
அதனால், அந்த வீரர்களை அதிக விலை கொடுத்து ஏலத்தில் தேர்வு செய்வதோடு, அவர்களோடு தொடர்பிலேயே உள்ளன. அந்த வீரர்கள் மீது ஒரு சொந்த நாட்டின் அணி அக்கறை காட்டுவது போல ஐபிஎல் அணிகளும் அக்கறை காட்டி வருகின்றன.
அந்த வகையில் இங்கிலாந்து வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் ஆடுவது போக மற்ற நாட்டு டி20 தொடர்களிலும் ஆட விரும்புகின்றனர். அதற்காக இங்கிலாந்து அணிக்காக ஆடுவதை தவிர்த்து வருகின்றனர்.
முக்கியமான ஆஷஸ் கிரிக்கெட் தொடர், இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர், உலகக்கோப்பை போன்றவற்றில் மட்டுமே பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது இங்கிலாந்து உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் 11 வீரர்கள் ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றுள்ளனர்.
2023 உலகக்கோப்பை தொடருக்கும் அணித் தேர்வில் சவாலை சந்தித்த இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு தொடர்ந்து அணியில் ஆடும் இளம் வீரர்களை நம்பாமல், சொந்த நாட்டை விட்டு பல நாடுகளில் டி20 தொடர்களில் ஆடி வரும் மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட், டாவிட் மலன் மற்றும் பிற வீரர்களின் பின் சென்றது. அவர்களுக்கு அணியில் முக்கியத்துவம் அளித்தது.
அணித் தேர்வு இப்படி நடந்ததில் கூட எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், உலகக்கோப்பை நடந்து கொண்டிருக்கும் போதே வீரர்களுக்கான நீண்ட கால ஒப்பந்தத்தை தயார் செய்தது.
அதில் தான் குளறுபடிகள் நடந்தன. மற்ற டி20 தொடர்களில் ஆடுவதை தவிர்த்து இங்கிலாந்து அணிக்காக வீரர்கள் ஆட வேண்டும் என்ற நோக்கில் அந்த ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டது.
ஐபிஎல் அணிகளை விட இங்கிலாந்து அணிக்கு வீரர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல முக்கிய வீரர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
அதிக வெளிநாட்டு டி20 தொடர்களில் பங்கேற்காத வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. சில வீரர்களுக்கு ஒரு ஆண்டு மட்டுமே ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
டேவிட் வில்லிக்கு ஒப்பந்தமே அளிக்கப்படவில்லை. அவர் ஐபிஎல் தொடர் தவிர வேறு எந்த நாட்டு டி20 தொடரிலும் தற்சமயம் இடம் பெறவில்லை. அதே சமயம், அவர் சராசரியாக செயல்படுகிறார் என்ற காரணத்தை காட்டி, அவருக்கு ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை.
இந்த பாகுபாட்டை விரும்பாத டேவிட் வில்லி உலகக்கோப்பை நடக்கும் போதே தன் ஓய்வை அறிவித்து இருக்கிறார். அத்துடன் தான் ஒப்பந்த விவகாரத்தில் கோபமாகவும், ஏமாற்றத்துடனும் இருப்பதாக வெளிப்படையாக பேட்டி அளித்து இருக்கிறார்.
இங்கிலாந்து அணியில் ஒப்பந்தம் காரணமாக சலசலப்பு எழுந்துள்ளது என்பதற்கு டேவிட் வில்லியே ஒரு உதாரணம். இந்த சலசலப்பு கூட ஒரு அணியாக இங்கிலாந்து வீரர்களை செயல்பட விடாமல் தடுத்து இருக்கலாம் என முன்னாள் வீரர் மைக்கேல் வான் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |