ஆசிய கோப்பை: சூப்பர் ஓவரில் சர்ச்சை வெடித்தது ஏன்? நடுவர் வழங்கிய விதி விளக்கம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிவடைந்ததை அடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிவடைந்ததை அடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்யப் பணிக்கப்பட்ட இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. இலக்கைத் துரத்திய இலங்கை அணியில் நிசாங்கா அதிரடியாக விளையாடி சதம் அடித்த போதிலும், கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இலங்கை வீரர்கள் இரண்டு ரன்கள் மட்டுமே ஓடியதால் போட்டி சமனில் முடிவடைந்தது.
இந்த சூப்பர் ஓவர் முறையில்தான் ஒரு மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. முதல் பந்திலேயே இலங்கை வீரர் குசல் பெரேரா ஆட்டம் இழந்ததால், இலங்கை இரண்டாவது விக்கெட்டை இழந்தால் சூப்பர் ஓவர் அத்துடன் முடிவடைந்துவிடும் என்ற நிலை இருந்தது.
ஆட்டத்தின் நான்காவது பந்தில், சானக்கவுக்கு ஆர்ஸ்தீப் சிங் ஒரு யாக்கர் பந்தை வீசினார். அந்தப் பந்தை சானக்க மிஸ் செய்த நிலையில், சஞ்சு சாம்சன் பந்தைப் பிடித்து சானக்கவை ரன் அவுட் ஆக்கினார். இத்துடன் இலங்கையின் ஆட்டம் முடிந்தது என ரசிகர்கள் எதிர்பார்த்த தருணத்தில்தான் சர்ச்சை வெடித்தது. சானக்க மிஸ் செய்த அந்தப் பந்தை சஞ்சு சாம்சன் பிடித்ததை அடுத்து, ஆர்ஸ்தீப் சிங் கேட்சுக்கு அப்பீல் கேட்டிருக்கிறார். இதற்கு நடுவரும் உடனடியாக 'அவுட்' வழங்கிவிட்டார்.
தோல்வியை தழுவாத அணி.... சூப்பர் ஓவரில் இந்தியா அபார வெற்றி! இறுதி வரை தொடர்ந்த பரபரப்பு!
இந்தச் சமயத்தில், சானக்க உடனடியாக ரிவியூ (DRS) கேட்டார். ரீப்ளேவில் பந்து பேட்டில் படவில்லை எனத் தெரிந்ததால், அவருக்கு 'நாட் அவுட்' வழங்கப்பட்டது. சனக்கா ஏற்கெனவே ரன் அவுட் ஆகிவிட்டாரே, அவரை களத்தை விட்டுப் போகச் சொல்லுங்கள் என்று இந்திய வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர். ஆனால், கிரிக்கெட் விதியைச் சுட்டிக்காட்டி நடுவர் ஒரு விளக்கத்தை அளித்தார்.
சானக்க ரன் அவுட் ஆவதற்கு முன்பே, அவர் கேட்ச் ஆகிவிட்டதாக நினைத்து நடுவர் அவுட் வழங்கிவிட்டதால், பந்து அத்துடன் முடிந்துவிட்டது (Dead). தாம் முதலில் எதற்கு அவுட் கொடுத்தேனோ, அத்துடன் அந்தப் பந்து முடிந்துவிட்டதாகவும், இதனால் ரன் அவுட் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் நடுவர் கூறினார். தற்போது ரீப்ளேவில் அவர் கேட்ச் ஆகவில்லை எனத் தெரிந்ததால், சானக்க அவுட் கிடையாது என்றும் நடுவர் உறுதிப்படுத்தினார்.
நடுவரின் இந்த விதி விளக்கத்தால் இந்திய ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். எனினும், இந்தச் சம்பவத்திற்கு அடுத்த பந்திலேயே சானக்க, ஆர்ஸ்தீப் சிங் வீசிய பந்தில் மீண்டும் அவுட்டானார். இதன் மூலம் இலங்கை அணி சூப்பர் ஓவரில் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தது.
தாம் ரன் அவுட் ஆகிவிட்டேன் எனத் தெரிந்தவுடன், தான் கேட்ச் ஆகவில்லை எனக் கூறி சானக்க ரிவ்யூ கேட்டதுதான் இந்தச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது என்றும், மேலும் ஆர்ஸ்தீப் சிங்கும் இதற்கு அவுட் கேட்டிருக்கக் கூடாது என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
