தோல்வியை தழுவாத அணி.... சூப்பர் ஓவரில் இந்தியா அபார வெற்றி! இறுதி வரை தொடர்ந்த பரபரப்பு!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிவடைந்ததால், வெற்றியாளர்களை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிவடைந்ததால், வெற்றியாளர்களை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா எளிதில் வென்றதால், ஆசிய கோப்பை தொடரில் தோல்வியே தழுவாத அணி என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில், கில் நான்கு ரன்களிலும், கேப்டன் சூரியகுமார் 12 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
இதன்பிறகு, அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். நடுவரிசையில் சாம்சன் 23 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க, ஹர்திக் பாண்டியா இரண்டு ரன்களில் வெளியேறினார்.
மற்றொரு நட்சத்திர வீரரான திலக் வர்மா 34 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து கடைசிவரை நின்றார். இறுதியில் அக்சர் பட்டேல் 15 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.
203 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் குஷால் மெண்டீஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். எனினும், மற்றொரு தொடக்க வீரரான நிசாங்கா இந்திய பந்துவீச்சை சிதறடித்தார், அவருக்கு குசல் பெரேரா நல்ல கம்பெனி கொடுத்தார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு இலங்கை அணி 127 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய குசல் பெரேரா 32 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி 12.2 ஓவரில் 134 ரன்களில் இரண்டாவது விக்கெட்டை இழந்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் அசலங்கா ஐந்து ரன்களிலும், கமிண்டு மெண்டீஸ் மூன்று ரன்களிலும் பெவிலியன் திரும்பியதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. எனினும், நிசாங்கா மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை நின்று சதத்தை நிறைவு செய்தார்.
கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்திலே நிஷாங்கா ஆட்டமிழந்தார். எனினும் சனக்கா மற்றும் லியாங்கே ஆகியோர் பவுண்டரி மற்றும் டபுள்ஸ் எடுக்க, கடைசி பந்தில் இலங்கை அணிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சணக்கா இரண்டு ரன்கள் ஓடி எடுத்ததால், போட்டி சமனில் முடிவடைந்தது.
போட்டி சமனில் முடிவடைந்ததை அடுத்து வெற்றியாளர்கள் தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கை அணி மீண்டும் பேட்டிங் செய்ய வந்தபோது, குசல் பெரேரா முதல் பந்திலே ஆட்டம் இழந்தார். ஐந்தாவது பந்தில் சனங்காவும் ஆட்டம் இழந்தார்.
இதன் விளைவாக, இலங்கை அணி சூப்பர் ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத் தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் முதல் பந்தை எதிர்கொண்டு மூன்று ரன்கள் எடுக்க, இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு தொடரில் இந்தியா தோல்வியை தழுவாத அணியாக வலம் வந்துள்ளது.
