ஓய்வுக்கு பின்னரும் விராட் கோலி செய்த மாபெரும் சாதனை...  ஐசிசி தரவரிசையில் யாரும் படைக்காத ரெக்கார்டு

ஐசிசி டி20 தரவரிசைப் புள்ளிகளை திருத்தி அமைத்தது. அதன் ஒரு பகுதியாக விராட் கோலியின் அதிகபட்ச டி20 தரவரிசைப் புள்ளிகளை 897-லிருந்து 909-ஆக திருத்தியுள்ளது. 

ஓய்வுக்கு பின்னரும் விராட் கோலி செய்த மாபெரும் சாதனை...  ஐசிசி தரவரிசையில் யாரும் படைக்காத ரெக்கார்டு

டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று ஒரு வருடம் ஆகும் நிலையிலும் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் ஐசிசி தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார். 

ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக தரவரிசையில் பெற்று இருந்த விராட் கோலி, சர்வதேச டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 897 புள்ளிகளை மட்டுமே பெற்று இருந்தார். 

இதனிடையே விராட் கோலி 2024-இல் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்தார். 

அத்துடன், அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.  கோலி இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். 

இந்த நிலையில் சமீபத்தில் ஐசிசி டி20 தரவரிசைப் புள்ளிகளை திருத்தி அமைத்தது. அதன் ஒரு பகுதியாக விராட் கோலியின் அதிகபட்ச டி20 தரவரிசைப் புள்ளிகளை 897-லிருந்து 909-ஆக திருத்தியுள்ளது. 

அதன் காரணமாக இந்த சாதனை சாத்தியம் ஆகி உள்ளது. கோலி ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தியாவிற்காக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவில்லை என்ற நிலையில், தரவரிசையில் ஏற்பட்ட இந்த மாற்றம் பல ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இருப்பினும், இது ஐசிசியின் வழக்கமான செயற்பாடுகளில் ஒன்றாகும். கடந்த கால போட்டி செயல்பாடுகளை மீண்டும் மதிப்பீடு செய்து, அதற்கேற்ப வீரர்களின் தரவரிசையை சரிசெய்வார்கள். 

மறுமதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு வீரரின் அதிகபட்ச தரவரிசை புள்ளிகள் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். இதன் மூலம் தான் டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதேச டி20 என மூன்று வடிவங்களிலும் விராட் கோலி 900 புள்ளிகளைக் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

விராட் கோலியின் சர்வதேச டி20 தரவரிசை இந்த திருத்தத்துக்கு பின் 909 என்பதாக இருக்கும் நிலையில் அவர் ஐசிசியின் சர்வதேச டி20 தரவரிசையில் டேவிட் மலான் (919) மற்றும் சூர்யகுமார் யாதவ் (912) ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். 

இதேவேளை, டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதேச டி20 போட்டி என மூன்றிலும் சதம் அடித்த இந்திய வீரர்களில் விராட் கோலியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.