ரோஹித் – விராட் கோலி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்: 2026-ல் 18 ஒருநாள் போட்டிகள்!
முன்பெல்லாம் சிறிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும். ஆனால் இப்போது, ரோஹித் - கோலி டெஸ்ட் அல்லது T20 ஆடுவதில்லை என்பதால், ஆப்கானிஸ்தான் போன்ற தொடர்களில் கூட இவர்கள் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.
2025 ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ஒரு பொற்காலமாக அமைந்தது என்பதில் ஐயமில்லை. சாம்பியன்ஸ் டிராபி வெற்றி, இங்கிலாந்துக்கு எதிரான வைட்வாஷ் வெற்றி, தென்னாப்பிரிக்காவுடனான தொடர் வெற்றி என இந்திய அணி உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு ஜாம்பவான்கள் தங்கள் அபாரமான ஆட்டத்தின் மூலம் விமர்சகர்களின் வாயை அடைத்தனர்.
இப்போது, டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்த இரு நட்சத்திரங்களும், இனி ஒருநாள் போட்டிகளில் (ODI) மட்டுமே களமிறங்க உள்ளனர். அவர்களின் முழு கவனமும் 2027-ல் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை மீது செலுத்தப்பட்டுள்ளது. எனவே, உடல் தகுதி மற்றும் ஃபார்மை நிரூபிக்கும் நோக்கில், கிடைக்கும் அனைத்து ODI போட்டிகளிலும் இவர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பெல்லாம் சிறிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும். ஆனால் இப்போது, ரோஹித் - கோலி டெஸ்ட் அல்லது T20 ஆடுவதில்லை என்பதால், ஆப்கானிஸ்தான் போன்ற தொடர்களில் கூட இவர்கள் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.
2026 ஆம் ஆண்டில் இந்தியா மொத்தம் 6 ஒருநாள் தொடர்களில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தோராயமாக 18 போட்டிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
ஜனவரியில் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து 3 போட்டிகளில் மோதும். இதில் ரோஹித் மற்றும் கோலி பங்கேற்பது உறுதி. ஜூன் மாதத்தில், இந்திய மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஜூலையில், இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்று அங்கு 3 ODI போட்டிகளில் விளையாடும். செப்டம்பர்-அக்டோபர் காலகட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு வந்து 3 ஒருநாள் போட்டிகளில் மோதும். அதன் பிறகு, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளில் விளையாடும். இறுதியாக, டிசம்பரில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது, ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் 2026 ஆம் ஆண்டில் குறைந்தது 18 ஒருநாள் போட்டிகளில் களமிறங்குவார்கள் எனத் தெளிவாகிறது. இதற்கு மேலும், அரசியல் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட வங்கதேசத்திற்கு எதிரான தொடர் இந்த ஆண்டு நடைபெற்றால், போட்டிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.
2026 ஆம் ஆண்டு, ரோஹித் – கோலி ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான ஆண்டாக இருக்கப்போகிறது. இந்த 18 போட்டிகள், 2027 உலகக்கோப்பைக்கான முன்னோட்டமாகவும், தொடர்ச்சியான தகுதிச் சோதனையாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
