பழிக்கு பழி... மும்பை அணிக்கே ஆட்டம் காட்டிய கில்.. கடைசி ஓவரில் ஹர்திக்கால் நடந்த ட்விஸ்ட்...!
மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் நான்கு ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.
இந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி போட்டி, அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த போட்டி என ஒரு உணர்வை கொடுத்திருந்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடிவிட்டு ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணியில் இணைந்ததில் இருந்து தற்போது அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தது வரை பல விஷயங்கள் அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தது.
இந்த போட்டியில் ஹர்திக் எடுத்த சில முடிவுகள் கூட ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணியது என்று சொல்லலாம். இன்னொரு பக்கம் மைதானத்தில் இருந்து பலரும் கூட ரோஹித், ரோஹித் என பழைய மும்பை கேப்டன் பெயரை தான் குறிப்பிட்டு வந்தனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி ஆடிய குஜராத் அணியில் எந்த வீரர்களும் பெரிதாக அதிரடியாக ஆடி ரன் சேர்க்கவில்லை.
சாய் சுதர்சன் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுக்க கடைசி கட்டத்தில் ராகுல் தெவாட்டியா அதிரடியாக ஆடி 22 ரன்கள் சேர்த்திருந்தார். 20 ஓவர்களில் அவர்கள் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தனர்.
மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் நான்கு ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.
ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் கால் பதித்த பும்ரா தனது முதல் போட்டியிலேயே முத்திரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஆடிய மும்பை அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷன் வந்த வேகத்தில், டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் வந்த அறிமுக வீரர் நமன் திர் 20 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியில், ரோஹித் ஷர்மா மற்றும் டெவால்டு ப்ரேவிஸ் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். இதற்கிடையே ரோஹித் 43 ரன்களில் அவுட்டாக, பின்னர் நிதானமாக மும்பை வீரர்கள் ரன் சேர்த்தனர்.
இதன் பின்னர் ப்ரேவிஸ் மற்றும் டிம் டேவிட் ஆகியோரும் அவுட்டாக, மும்பை இந்தியன்ஸ் பக்கம் இருந்த வெற்றி வாய்ப்பு, கொஞ்சம் கொஞ்சமாக குஜராத் பக்கமும் மாற தொடங்கியது. இதனால், கடைசி 2 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 27 ரன்கள் வேண்டும் என்ற நிலை இருந்தது.
கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட, முதல் இரண்டு பந்துகளை சிக்ஸர் மற்றும் ஃபோருக்கு பறக்க விட்ட ஹர்திக் அடுத்த பந்தில் அவுட்டாக, மீதமிருந்த 3 பந்துகளில் மேலும் ஒரு விக்கெட் விழுந்து 2 ரன்களை மட்டுமே மும்பை சேர்த்தது. இதனால் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |