பும்ரா விலகல்?.. அறிமுக பந்துவீச்சாளரை களமிறக்கும் கம்பீர்... காரணம் இதுதான்!

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்து, அதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

பும்ரா விலகல்?.. அறிமுக பந்துவீச்சாளரை களமிறக்கும் கம்பீர்... காரணம் இதுதான்!

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்து, அதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி, ஜூலை 31ஆம் தேதி ஓவலில் துவங்கவுள்ளதுடன், இப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தாலோ அல்லது டிரா செய்தாலோ, இத்தொடரை இங்கிலாந்து அணிதான் கைப்பற்றும். 

இதனால், இப்போட்டியில் வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்க உள்ளது நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் பும்ரா பங்கேற்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. 

இவர், முதல் மற்றும் மூன்று ஆகிய டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு, தலா 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஆனால், அதன்பிறகு நான்காவது டெஸ்டில் சிறப்பாக பந்துவீசவில்லை. 

ஒரேயொரு இன்னிங்ஸில் மட்டுமே இந்தியா பந்துவீசிய நிலையில், அதில் பும்ரா 33 ஓவர்களை வீணி, 112 ரன்களை விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்களை எடுத்தார்.

இதுவரை பும்ரா 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இந்நிலையில், முதல் முறையாக, ஒரு இன்னிங்ஸில், அவர் 100+ ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பினார். இதற்கு முக்கிய காரணம், அவரது வேகம் குறைந்ததுதான். 

3ஆவது டெஸ்டில் விளையாடி, தொடர்ச்சியாக 4ஆவது டெஸ்டில் விளையாடிய பும்ரா, கிட்டதட்ட 135+ வேகத்திற்கும் குறைவாகத்தான் அதிக பந்துகளை வீசினார். அவரது இடது காலில் பிரச்சினையும் இருந்தது. இதனால், பும்ராவுக்கு 5ஆவது டெஸ்டில் விளையாட வாய்ப்பு கிடைக்காது எனக் கருதப்படுகிறது.

இந்திய டி20 அணியில் சிறப்பாக பந்துவீசி, ஐசிசி தரவரிசையில் 9ஆவது இடத்தில் இருக்கும் அர்ஷ்தீப் சிங், 4ஆவது டெஸ்டிலேயே அறிமுகமாவார் எனக் கூறப்பட்டது. ஆனால், அப்போது அவர் காயம் காரணமாக அவதிப்பட்டதால், திடீரென்று அன்ஷுல் கம்போஜுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 

கம்போஜும் படுமோசமாக சொதப்பி, தொடர்ச்சியாக 120+ வேகத்தில்தான் பந்துவீசினார். இதனால், அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், 5ஆவது டெஸ்ட் போட்டியில், பும்ராவுக்கு மாற்றாக அர்ஷ்தீப் சிங்கை விளையாட வைக்க இந்திய அணிக் கேப்டன் ஷுப்மன் கில், தலைமை பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

26 வயதாகும் அர்ஷ்தீப் சிங், இந்திய அணிக்காக 9 ஒருநாள் போட்டிகளில் பந்துவீசி 14 விக்கெட்களையும், 63 டி20 போட்டிகளில் 99 விக்கெட்களையும் எடுத்துள்ளார். ஒரு ஒருநாள் போட்டியில், அதிகபட்சமாக 5/37 விக்கெட்களை எடுத்திருக்கிறார். 

டி20 பார்மெட்டில், ஒரு போட்டியில், வெறும் 9 ரன்களை விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்களையும் எடுத்திருக்கிறார். 2019ஆம் ஆண்டு முதல், 21 முதல்தர போட்டிகளில் விளையாடியிருக்கும் அர்ஷ்தீப் சிங், அதில் 3.20 எகனாமியில் 66 விக்கெட்களை எடுத்துள்ளார். 

பேட்டிங்கில், பெரிய ரன்களை அடித்தது கிடையாது. 10.9 சராசரியில் 250 ரன்களை மட்டும்தான் அவரால் எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.