உலகக்கோப்பை வரலாற்றில் செம ரெக்கார்ட்.. சச்சின் சாதனையை சமன் செய்த ரச்சின்!

அதேபோல் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் ரச்சின் ரவீந்திரா படைத்தார். 

Oct 28, 2023 - 22:44
உலகக்கோப்பை வரலாற்றில் செம ரெக்கார்ட்.. சச்சின் சாதனையை சமன் செய்த ரச்சின்!

உலகக்கோப்பை தொடரின் 27வது லீக் போட்டியில் சமபலம் வாய்ந்த ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவர்களில் 388 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 67 பந்துகளில் 109 ரன்களும், டேவிட் வார்னர் 81 ரன்களும் சேர்த்தனர்.

நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் மற்றும் போல்ட் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கான்வே - யங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. 

அதில் கான்வே 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரச்சின் ரவீந்திரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் ஒரு பக்கம் விக்கெட்டை காத்து நிற்க, எதிர்முனையில் வந்த வீரர்கள் சிக்சர்கள் அடிக்க முற்பட்டு அடுத்த விக்கெட்டை இழந்தனர்.

ஆனால் எதையும் கண்டுகொள்ளாத ரச்சின் ரவீந்திரா, ஆஸ்திரேலியா அணி பவுலர்களை சோலோவாக அட்டாக் செய்ய தொடங்கினார். சிறப்பாக ஆடிய அவர், 49 பந்துகளில் சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். 

இதன்பின் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்சர்களை விளாசிய அவர், அடுத்த 28 பந்துகளில் சதத்தை எட்டினார். எப்படி சிக்சர் அடித்து அரைசதத்தை எட்டினாரோ, அதேபோல் சிக்சர் அடித்து சதம் விளாசினார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ரச்சின் ரவீந்திரா அடிக்கும் 2வது சதமாகும்.

அதேபோல் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் ரச்சின் ரவீந்திரா படைத்தார். 

அதுமட்டுமல்லாமல் 26 வயதை எட்டுவதற்குள் 2 சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது ரச்சின் ரவீந்திராவும் இணைந்துள்ளார். 

அதேபோல் நியூசிலாந்து அணிக்காக ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் கேன் வில்லியம்சன், டர்னர், கப்தில் உள்ளிட்டோரின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா 89 பந்துகளில் 5 சிக்ச், 9 பவுண்டரி உட்பட 116 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரின் பெற்றோர், சச்சின் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் ரசிகர்கள் என்பதால், இருவரின் பெயர்களையும் இணைந்து இவருக்கு ரச்சின் என்று பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!