அதிரடியில் ரஸலையே ஓரம் கட்டிய ‘சிக்சர் மன்னன்’ அபிஷேக் சர்மா: நாக்பூரில் வரலாற்றுச் சாதனை

அபிஷேக் சர்மா டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டினார். அதிரடி பேட்டிங்கால் அவர், ஒரே இன்னிங்ஸில் சாதனைகளைக் குவித்து கவனம் ஈர்த்தார்.

அதிரடியில் ரஸலையே ஓரம் கட்டிய ‘சிக்சர் மன்னன்’ அபிஷேக் சர்மா: நாக்பூரில் வரலாற்றுச் சாதனை

நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20 போட்டியில், இந்திய அணியின் இளம் அதிரடி நட்சத்திரம் அபிஷேக் சர்மா டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டினார். அதிரடி பேட்டிங்கால் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய அவர், ஒரே இன்னிங்ஸில் சாதனைகளைக் குவித்து கவனம் ஈர்த்தார்.

இந்த போட்டியில் வெறும் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா, டி20 கிரிக்கெட்டில் பந்துகளின் அடிப்படையில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் வைத்திருந்த சாதனையை அவர் முறியடித்தார். ரசல் 2,942 பந்துகளில் 5,000 ரன்களை எட்டியிருந்த நிலையில், அபிஷேக் சர்மா 2,988 பந்துகளில் அந்த மைல்கல்லை அடைந்தார்.

இதுமட்டுமல்லாமல், அபிஷேக் சர்மா 22 பந்துகளில் விளாசிய அரைசதம், நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிவேக அரைசதமாகவும் பதிவானது. இதற்கு முன்பு கே.எல். ராகுல் (ஆக்லாந்து, 2020) மற்றும் ரோஹித் சர்மா (ஹாமில்டன், 2020) தலா 23 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

இந்த முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி, அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்துடன் ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 32 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 25 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் ஃபினிஷராக களமிறங்கிய ரிங்கு சிங் 20 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினார்.

நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பாகப் பந்துவீசினார். இருப்பினும், இந்தியாவின் அதிரடி பேட்டிங்கை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.