சொந்த ஊர் பாசமா காரணம்? ஆயுஷ் பதோனி தேர்வைச் சுற்றி கம்பீர்மீது எழும் சர்ச்சை
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீர், டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதாகும் என்ற குற்றச்சாட்டு தற்போது வலுத்துள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீர், டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதாகும் என்ற குற்றச்சாட்டு தற்போது வலுத்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகிய நிலையில், அவரது இடத்திற்கு அக்சர் படேல் அல்லது ரிங்கு சிங் போன்ற அனுபவமிக்க வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென ஆயுஷ் பதோனி அணியில் சேர்க்கப்பட்டதே ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் நடுவே, இந்திய அணியின் இரண்டு முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
ஏற்கனவே ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகிய பிறகு, அவரது இடத்தில் துருவ் ஜுரெல் அணியில் சேர்க்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தரும் காயம் அடைந்ததால் ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த சூழலில்தான், ஆயுஷ் பதோனிக்கு திடீரென வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் சுந்தரின் இடத்திற்கு ஷாபாஸ் அஹ்மத், நிதீஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங் போன்ற வீரர்கள் தயாராக இருந்த போதும், அவர்களை தவிர்த்து பதோனி தேர்வு செய்யப்பட்டதே விமர்சனங்களுக்கு காரணமாகியுள்ளது. குறிப்பாக அக்சர் படேல் போன்ற அனுபவமிக்க ஆல்ரவுண்டர் இருக்கும்போது, பதோனியை தேர்வு செய்தது புரியாத முடிவாக பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரிலும் ஆயுஷ் பதோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதும் விமர்சனங்களுக்கு வலு சேர்த்துள்ளது. டெல்லி அணிக்காக விளையாடிய நான்கு போட்டிகளில் அவர் 16 ரன்கள் மட்டுமே எடுத்ததுடன், நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த புள்ளிவிவரங்கள், இந்திய அணித் தேர்வுக்கு போதுமானதாக இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, டெல்லியைச் சேர்ந்த ஹர்சித் ராணாவுக்கும் கம்பீர் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. ஹர்சித் ராணா, கம்பீருடன் கேகேஆர் அணிக்காக விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஆயுஷ் பதோனியும் டெல்லி அணிக்காக விளையாடுவதோடு, கம்பீர் ஆலோசகராக இருந்த காலத்தில் லக்னோ அணிக்காகவும் ஆடியவர்.
இந்த பின்னணியில், கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் கூட்டணி, இந்திய அணியை தங்களுக்குப் பிடித்த வீரர்களை மையமாக வைத்து உருவாக்குகிறது என்ற விமர்சன குரல்கள் வலுப்பெற்று வருகின்றன.
