நான்கு ஆண்டு நிறைவில் ஜூலி சங்: பொங்கலுடன் இலங்கையை விடைபெறும் அமெரிக்கத் தூதுவர்

சங்கின் நான்கு ஆண்டு பணிக்காலத்தில் அமைக்கப்பட்ட இந்த அடித்தளத்தின் மீது, அமெரிக்கா இலங்கையுடனான தனது மூலோபாய உறவைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டு நிறைவில் ஜூலி சங்: பொங்கலுடன் இலங்கையை விடைபெறும் அமெரிக்கத் தூதுவர்

அமெரிக்காவின் இலங்கைத் தூதுவராக கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் பணியாற்றிய ஜூலி சங், ஜனவரி 16, 2026 அன்று இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

இது அவரது கொழும்பு இராஜதந்திர பணிக்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. “இலங்கையில் கழித்த ஒவ்வொரு தருணங்களையும் நான் விரும்பினேன்,” என்று தெரிவித்த தூதுவர் சங், தனது பணிக்காலத்தில் இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்புப் பங்காண்மை, வர்த்தகம், முதலீடு, கல்வி மற்றும் ஜனநாயக மதிப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியதாகக் கூறினார்.

அதன் மூலம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு சுதந்திரமான, திறந்த மற்றும் பாதுகாப்பான சூழலை ஆதரிக்கும் வகையில் ஒரு உறுதியான உறவை இரு நாடுகளும் கட்டியெழுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2022 பெப்ரவரியில் தொடங்கிய அவரது பணிக்காலம், அமெரிக்கா–இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவு (2023), பீஸ் கோர் தொண்டு நிறுவனத்தின் மீள்சேவை (2024), மற்றும் ஃபுல்பிரைட் திட்டத்தின் 80வது ஆண்டு நிறைவு போன்ற முக்கிய மைல்கற்களை உள்ளடக்கியது.

இலங்கையில் LEED Gold சான்றிதழ் பெற்ற புதிய அமெரிக்கத் தூதரக வளாகத்திற்கு இடமாற்றம் (2022 அக்டோபர்) அவரது காலத்தில் நிகழ்ந்தது. இது, இலங்கையில் அமெரிக்காவின் நீண்டகால நிலைப்பு, பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் எதிர்காலத்திற்கான ஒத்துழைப்பு உறவை வலியுறுத்துகிறது.

கலாச்சாரப் பாரம்பரிய பாதுகாப்பிலும் தூதுவர் சங் முக்கிய பங்காற்றினார். ஹம்பாந்தோட்டை அருகே உள்ள கொடவாய கப்பற் சிதைவு பாதுகாப்பு திட்டத்திற்கு கலாச்சாரப் பாதுகாப்புத் தூதுவர்கள் நிதியம் மூலம் ஆதரவு வழங்கப்பட்டது. இது அமெரிக்க ஈடுபாட்டின் கலாச்சார அங்கமாக விளங்குகிறது.

சங்கின் நான்கு ஆண்டு பணிக்காலத்தில் அமைக்கப்பட்ட இந்த அடித்தளத்தின் மீது, அமெரிக்கா இலங்கையுடனான தனது மூலோபாய உறவைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தூதுவர் நியமிக்கப்படும் வரை, தூதரகத்தின் பிரதிப் பிரதானி ஜேன் ஹொவெல் பொறுப்பேற்றுச் செயல்படுவார்.