மண்சரிவில் சிக்கி மூன்று நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்ட குடும்பம் - நடந்தது என்ன?

அதிர்ஷ்டவசமாக, வீட்டின் மற்ற பகுதிகள் முற்றிலும் இடிந்து போனாலும், சமையலறை மட்டும் சிறிய அளவில் தப்பித்து, அவர்களுக்கு உயிர்பிழைக்க வாய்ப்பளித்தது.

மண்சரிவில் சிக்கி மூன்று நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்ட குடும்பம் - நடந்தது என்ன?
படம் - வைப்பகம்

டித்வா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட கனமழை காரணமாக பசறை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய ஒரு குடும்பம், மூன்று நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்டுள்ளது. இது காலநிலை பேரழிவுகளின் நடுவே ஒரு அற்புதமான உயிர்ப்பிழைப்பு என பொதுமக்களிடையே பாராட்டப்படுகிறது.

பசறை பகுதியில் பெய்த கனமழையால் பல வீடுகள் மண்சரிவில் மூழ்கின. அந்த வரிசையில், குணபால் என்பவரின் வீடும் முற்றிலும் மண்ணில் புதைந்தது. அந்த நேரத்தில், குணபால், அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய மூவரும் சமையலறையில் இருந்தனர்.

அதிர்ஷ்டவசமாக, வீட்டின் மற்ற பகுதிகள் முற்றிலும் இடிந்து போனாலும், சமையலறை மட்டும் சிறிய அளவில் தப்பித்து, அவர்களுக்கு உயிர்பிழைக்க வாய்ப்பளித்தது.

மூன்று நாட்களாக மண்ணின் அடியில் சிக்கி, உணவு மற்றும் தண்ணீரின்றி உயிர்போராட்டத்தில் இருந்த அவர்கள், மூன்றாம் நாளில் மேலிருந்து கேட்ட கனரக இயந்திரங்களின் ஓசையை உணர்ந்தனர். உடனடியாக, குணபால் சமையலறையில் இருந்த சிறிய ஓட்டை வழியாக கரண்டியால் தட்டி, தங்கள் இருப்பை மேலுலகிற்கு அறிவித்தார்.

இந்த ஓசையை அவதானித்த இராணுவத்தினர், உடனடி நடவடிக்கை எடுத்து, கனரக இயந்திரங்கள் மூலம் மண்ணை அகற்றி மூவரையும் உயிரோடு மீட்டனர்.

மீட்கப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் தற்போது இராணுவ மருத்துவமனையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றனர்.