இந்தியாவின் பந்துவீச்சால் அரண்டு போன அமீரக அணி.... 57 ரன்களுக்கு ஆல்-அவுட்! இந்திய வீரர்கள் அசத்தல்!

2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே, இந்திய அணி பந்துவீச்சில் மாபெரும் ஆதிக்கம் செலுத்தியது.

இந்தியாவின் பந்துவீச்சால் அரண்டு போன அமீரக அணி.... 57 ரன்களுக்கு ஆல்-அவுட்! இந்திய வீரர்கள் அசத்தல்!

2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே, இந்திய அணி பந்துவீச்சில் மாபெரும் ஆதிக்கம் செலுத்தியது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது சரியான முடிவாக அமைந்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலுக்கு, ஐக்கிய அரபு அமீரக (UAE) பேட்ஸ்மேன்களால் எந்த ஒரு கட்டத்திலும் ஈடுகொடுக்க முடியவில்லை.

இந்தியாவின் பந்துவீச்சுத் தாக்குதலைத் தொடங்கிய ஜஸ்பிரித் பும்ரா, ஐக்கிய அரபு அமீரக தொடக்க வீரர் அலிஷான் ஷரஃபுவை 22 ரன்களில் வெளியேற்றி முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அவரைத் தொடர்ந்து, மர்ம சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, முஹம்மது ஜோஹைபை வெளியேற்றி ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார்.

8 ஓவர்கள் முடிவில் 47/2 என ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்த ஐக்கிய அரபு அமீரக அணியின் கதை, குல்தீப் யாதவ் வீசிய 9-வது ஓவரில் மொத்தமாக மாறியது. அந்த ஒரே ஓவரில், ராகுல் சோப்ரா, கேப்டன் முஹம்மது வசீம் மற்றும் ஹர்ஷித் கௌஷிக் என மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களையும் அடுத்தடுத்து வெளியேற்றி, குல்தீப் யாதவ் ஆட்டத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். இந்த ஓவருக்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரக அணி மீளவே இல்லை.

குல்தீப் யாதவ் ஏற்படுத்திய தாக்கத்தை, ஆல்-ரவுண்டர் சிவம் துபே தனது வேகப்பந்து வீச்சால் தொடர்ந்தார். பகுதிநேர பந்துவீச்சாளராகக் கருதப்பட்ட அவர், தனது அபாரமான பந்துவீச்சால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஆசிஃப் கான், துருவ் பராஷர் மற்றும் ஜுனைத் சித்திக் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி, ஐக்கிய அரபு அமீரக அணியின் மிடில் மற்றும் லோயர் ஆர்டரைச் சரித்தார்.

இந்திய பந்துவீச்சாளர்களின் தொடர் தாக்குதலால், ஐக்கிய அரபு அமீரக அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அக்சர் படேல் ஒரு விக்கெட்டை வீழ்த்த, மீண்டும் பந்துவீச வந்த குல்தீப் யாதவ், ஹைதர் அலியின் விக்கெட்டை கைப்பற்றி தனது நான்காவது விக்கெட்டைப் பதிவு செய்தார். இறுதியாக, ஐக்கிய அரபு அமீரக அணி 13.1 ஓவர்களில் வெறும் 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில், குல்தீப் யாதவ் 2.1 ஓவர்களில் வெறும் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருக்கு இணையாக, சிவம் துபே 2 ஓவர்களில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.

அடுத்து 58 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 4.3 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து இருந்தார்.