பிரேசிலில் பெண்கள் போராட்டம் – பாலின வன்முறைக்கு எதிராக குரல் எழுப்பிய லட்சக்கணக்கானோர்

பிரேசிலிய பொதுப் பாதுகாப்பு மன்றத்தின் 2025 அறிக்கையின்படி, பிரேசிலில் மூன்றில் ஒரு பெண் ஒரு வருடத்தில் பாலியல் அல்லது பாலின அடிப்படையிலான வன்முறையைச் சந்திக்கிறார்.

பிரேசிலில் பெண்கள் போராட்டம் – பாலின வன்முறைக்கு எதிராக குரல் எழுப்பிய லட்சக்கணக்கானோர்

பிரேசிலில் நேற்று, பல்லாயிரக்கணக்கான பெண்கள் – இளம் பெண்கள் முதல் முதியவர்கள் வரை – போராட்டத்தில் இணைந்து, பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக தங்கள் குரலை எழுப்பினர். இந்தப் போராட்டம், சமீபகாலமாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் முன்னெடுக்கப்பட்டது.

ரியோ டி ஜெனிரோ, சாவோ பாலோ உட்பட பல முக்கிய நகரங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில், சில ஆண்களும் பங்கேற்றனர். போராட்டக்காரர்கள் கருப்பு சிலுவைகளை கையில் ஏந்தி, பெண் கொலை, கற்பழிப்பு, பெண் வெறுப்பு (misogyny) ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தினர். மேலும், கருகலைப்புக்கான சட்டபூர்வமான அணுகலையும் அவர்கள் கோரினர்.

பிரேசிலிய பொதுப் பாதுகாப்பு மன்றத்தின் 2025 அறிக்கையின்படி, பிரேசிலில் மூன்றில் ஒரு பெண் ஒரு வருடத்தில் பாலியல் அல்லது பாலின அடிப்படையிலான வன்முறையைச் சந்திக்கிறார்.

2015-இல், பெண்களுக்கு எதிரான கொலைகளைத் தனித் தன்மை கொண்ட “பெண் கொலை” (femicide) என அங்கீகரிக்கும் சட்டம் பிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு (2024) 1,492 பெண்கள் பெண் கொலைக்கு இரையாகியுள்ளனர் – இது 2015-இலிருந்து இதுவரையிலான மிக உயர்ந்த பதிவு என பொதுப் பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

இந்த எண்கள், சட்டங்கள் இருந்தாலும் பாலின வன்முறைகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லை என்பதை வலியுறுத்துகின்றன. இந்த நிலைமைக்கு எதிராகவே, பொது இடங்களில் கருப்பு சிலுவைகளுடன் பெண்கள் இன்று ஒற்றுமையுடன் நின்று, “என்னைக் கொல்லாதே” என்ற தங்கள் குரலை உலகம் முழுவதும் எதிரொலிக்க வைத்துள்ளனர்.