47 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி பெங்களூர் வெற்றி!
முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் எடுத்தனர்.
நேற்றைய ஐபிஎல் இரண்டாவது போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 52 ரன்களும், வில் ஜாக்ஸ் 41 ரன்களும், கேமரூன் கிரீன் 32 ரன்களும் எடுத்தனர்.
அதே நேரத்தில் டெல்லி அணியில் கலீல் அகமது, ரசிக் சலாம் தலா 2 விக்கெட்டையும், முகேஷ் குமார், குல்தீப் யாதவ்,
இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டையும் பறித்தனர்.
188 ரன்கள்இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜேக் ஃப்ரேசர் இருவரும் களமிறங்கினர். இதில் முதல் ஓவரின் நாலாவது பந்தில் தொடக்க வீரர் டேவிட் வர்ணர் ஒரு ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த அபிஷேக் போரல் மூன்றாவது ஓவரில் 2 ரன்கள் எடுத்து விக்கெட் பறி கொடுத்தார். நிதானமாக சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் ஜேக் ஃப்ரேசர் 8 பந்தில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி என மொத்தம் 21 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
இதனால் டெல்லி அணி 3 ஓவரில் மூன்று விக்கெட்டை இழந்து 24 ரன்கள் எடுத்திருந்தனர். பின்னர் களமிறங்கிய குமார் குஷாக்ரா வந்த வேகத்தில் 2 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பிறகு அக்சர் படேல், ஷாய் ஹோப் இருவரும் கூட்டணி அமைத்து சரிவில் இருந்த அணியை மீட்டுக் கொண்டு வந்தனர்.
இருப்பினும் சிறப்பாக விளையாடிய ஷாய் ஹோப் சிக்ஸர் அடிக்கும் முயன்ற போது கரண் சர்மாவிடம் விக்கெட்டை கொடுத்து 29 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறி கொடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்டை டெல்லி பறிகொடுத்தாலும் கேப்டன் அக்சர் படேல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து நிலைத்து நிற்காமல் 57 ரன் எடுத்து நடையை காட்டினார்.
டெல்லி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு அணியில் யாஷ் தயாள் 3 விக்கெட்டையும், லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டையும், கேமரூன் கிரீன், ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மொத்தமாக 13 போட்டிகளில் விளையாடி தலா 6 போட்டியில் வெற்றியும், தலா 7 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |