கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் காலமானார்; யார் இந்த போப் பிரான்சிஸ்?
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இயற்கை எய்தியதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இயற்கை எய்தியதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று பாதிப்பு இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், ஈஸ்டர் திருநாளையொட்டி போப் பிரான்ஸிஸ் மக்களை நேரடியாக சந்தித்தார். வாடிகன் சதுக்கத்தில் கூடிய மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து ஈஸ்டர் செய்தியை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிலையில், அவர் திடீரென இன்று காலமானார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இத்தாலியில் இருந்து அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகருக்கு இடம் பெயர்ந்த தம்பதியின் மகனாக 1936 ஆம் ஆண்டு பிறந்தவர் போப் பிரான்சிஸ்.
ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு, Pleurisy என்ற அழற்சியால் 20 வயதிலேயே நுரையீரலின் ஒருபகுதி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் தனது கல்வியை தொடர்ந்து ஹோர்கே, வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
உடல் நலப் பாதிப்பு தந்த வெற்றிடமும் இயேசு கிறிஸ்து மீதான ஈர்ப்பும், இயேசு சபையில் 1958 ஆம் ஆண்டு அவரை இணைய வைத்தது. தனி ஓட்டுநரைக் கொண்ட சொகுசு கார் தமக்கு அளிக்கப்பட்டபோதும் அது வேண்டாம் என கூறி பொது போக்குவரத்திலேயே பயணம் செய்தார்.
தென் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ் ஆவார். இயேசு சபையிலிருந்து திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் இவர் ஆவார்.
அனைவரும் சமம் என்ற சமூகநீதி கொள்கைகளை கொண்ட போப் பிரான்சிஸ், எச்.ஐ.வி. உள்ளிட்ட பாதிப்புகளால் ஒதுக்கி தள்ளப்பட்ட நோயாளிகள் மீது பரிவு காட்டினார்.
போரில்லாத அமைதியான உலகிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த போப் பிரான்சிஸ், உலகில் அடிமை முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்ததுடன், பெண்களின் உரிமைகளுக்கும் குரல் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.