விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை.. லியோ போலி டிக்கெட் விற்பனை!

நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக இணைந்து வெளியாக உள்ள படம், லியோ.

Oct 12, 2023 - 11:40
விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை.. லியோ போலி டிக்கெட் விற்பனை!

நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக இணைந்து வெளியாக உள்ள படம், லியோ. அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வருகிற 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 

இந்நிலையில், வருகிற 18ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாகக் கூறி, மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள சினிப்பிரியா திரையரங்கம் பெயரில் போலியான டிக்கெட்டுகள் சமூக வலைத்தளங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவியது.

இந்நிலையில், இது தொடர்பாக சினிப்பிரியா திரையரங்க நிர்வாகம் தனது முகநூல் பக்கத்தில், லியோ திரைப்படம் தொடர்பாக 18ஆம் தேதி மாலை சிறப்பு காட்சி என்று வெளியாகி உள்ள டிக்கெட் போலியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை யாரும் வாங்க வேண்டாம் எனவும், அப்படி வாங்கினால் இதற்கு திரையரங்க நிர்வாகம் பொறுப்பல்ல எனவும், சினிப்பிரியா திரையரங்கில் லியோ திரைப்படம் வெளியீடு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும், அதுவரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மதுரையில் லியோ திரைப்பட சிறப்புக் காட்சி என்ற பெயரில் போலியான டிக்கெட் விற்பனை செய்யப்படுவது தொடர்பான புகாரில் சமூக வலைத்தளங்கள் மூலமாக விற்பனை செய்யப்படக்கூடிய நபர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!