கவாஸ்கருக்கு பின்னர் இங்கிலாந்து மண்ணில் சாதித்த ராகுல்! வேறு எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனை!
இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்த இந்தியத் தொடக்க வீரர் மற்றும் ஆயிரம் ரன்களை விளாசிய 5வது இந்தியர் என்ற பெருமையையும் கேஎல் ராகுல் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்த இந்தியத் தொடக்க வீரர் மற்றும் ஆயிரம் ரன்களை விளாசிய 5வது இந்தியர் என்ற பெருமையையும் கேஎல் ராகுல் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சு தேர்வு செய்ய இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
இருவரும் நிதானமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார்கள். கேஎல் ராகுல் தனது ஸ்டைலிஷான கவர் டிரைவ் மூலமாக பவுண்டரிகளாக விளாசி ரன்களை சேர்த்தார்.
மறுபக்கம் ஜெய்ஸ்வால் தேவைக்கேற்ப அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இந்த போட்டியில் 28 ரன்கள் எடுத்ததன் மூலமாகத் தொடக்க வீரராக இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை கேஎல் ராகுல் படைத்தார்.
இதற்கு முன்பாக இந்திய அணியின் தொடக்க வீரராக சுனில் கவாஸ்கர் மட்டுமே இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை குவித்திருக்கிறார். 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள சுனில் கவாஸ்கர், மொத்தமாக 1,152 ரன்களை குவித்திருக்கிறார்.
தொடக்க வீரராக இங்கிலாந்து மண்ணில் 12 போட்டிகளில் ஆடியுள்ள கேஎல் ராகுல் 1,012 ரன்களை விளாசி அசத்தியதுடன், இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்த 5 இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
முன்னதாக, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோர் ஆயிரம் ரன்களை விளாசி இருக்கின்றனர். அதேபோல் இந்த டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் 400 ரன்களுக்கு மேல் விளாசி அசத்தி இருக்கிறார்.
அவரின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில், ஒரே தொடரில் 400 ரன்களுக்கு மேல் அடிப்பது இதுவே முதல்முறையாகும். இந்த டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்ஸில் ஆடியுள்ள கேஎல் ராகுல் 2 சதங்கள், ஒரு அரைசதம் உட்பட மொத்தமாக 417 ரன்கள் எடுத்திருக்கிறார்.
விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், சீனியர் வீரராக கேஎல் ராகுல் அற்புதமான ஃபார்மில் ஆடி வருவது இளம் வீரர்கள் மீதான அழுத்தத்தை குறைத்திருக்கிறது.