கனடாவில் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு: 51 வயது இந்தியரை நாடுகடத்த உத்தரவு
பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைந்தது மற்றும் மாணவர்களுடன் ஒவ்வாத தொடர்பு வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாக உள்ளது என்று கருத்து தெரிவித்தது.
ஒட்டாவா: தனது பேரக்குழந்தையைப் பார்க்க தற்காலிக விசாவில் கனடாவுக்கு சென்ற 51 வயது இந்தியர் ஜகஜீத் சிங், அங்குள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவிகளுடன் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த கனடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியர்கள் அதிகளவில் குடியேறியுள்ள நாடுகளில் கனடா முக்கியமானது. இந்நிலையில், இந்திய நாட்டவரைச் சேர்ந்த ஒருவரின் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டு அங்கு கூடுதல் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜகஜீத் சிங், 6 மாத தற்காலிக விசாவில் கனடாவில் தங்கி வந்தார். விசா காலாவதியாகுவதற்குமுன் அவர் இந்தியா திரும்பத் திட்டமிட்டிருந்தார். எனினும் பள்ளி வளாகத்தில் அனுமதியின்றி சுற்றித்திரிந்தது, அங்கிருந்த மாணவிகளிடம் தகுதி அற்ற அணுகுமுறை காட்டியதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
மாணவர்களின் புகாரின் அடிப்படையில் அவர் செப்டம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம், பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைந்தது மற்றும் மாணவர்களுடன் ஒவ்வாத தொடர்பு வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாக உள்ளது என்று கருத்து தெரிவித்தது.
குற்றச்சாட்டுகளுக்கான ஆரம்ப தண்டனையை வழங்கிய பின்னர், மேலொரு புகார் எழுந்ததால் வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டது.
இறுதியில், நீதிமன்றம் ஜகஜீத் சிங்கை உடனடியாக இந்தியாவுக்கு நாடுகடத்தி, இனி அவர் கனடாவுக்குள் நுழைவதை நிரந்தரமாகத் தடை செய்ய உத்தரவிட்டது. மாணவர்கள் இவரின் நடத்தை தங்கள் மனநிலையை பாதித்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
கனடாவில் சமீப ஆண்டுகளில் குடியேற்றக் கொள்கைகளைச் சுற்றி விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியர் ஒருவர் இத்தகைய குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது கூடுதல் எதிர்ப்புக்களையும் அரசியல் சர்ச்சைகளையும் தூண்டியுள்ளது.
