கனடாவை விட்டு வெளியேறும் திறமையான புலம்பெயர்ந்தோர்: புதிய ஆய்வில் வெளியான எச்சரிக்கை
கனடாவுக்கு புலம்பெயர்ந்து வரும் மக்களில், உயர்கல்வி பெற்றும் திறன்மிக்கவர்களே நாட்டை மிக விரைவாக விட்டு வெளியேறி வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கனடாவுக்கு புலம்பெயர்ந்து வரும் மக்களில், உயர்கல்வி பெற்றும் திறன்மிக்கவர்களே நாட்டை மிக விரைவாக விட்டு வெளியேறி வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இதேநேரத்தில், கனடா அரசு தற்காலிக குடியிருப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டில் வழங்கப்படவிருந்த 516,000 தற்காலிக அனுமதிகள் 385,000 என குறைக்கப்பட்டுள்ளன. மேலும், 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 370,000 பேருக்கு மட்டுமே இவ்வாறான அனுமதிகள் வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இது, புலம்பெயர்வோர் வருகையை கட்டுப்படுத்தும் அரசின் புதிய முயற்சியாக கருதப்படுகிறது.
ஆயினும், உண்மையான பிரச்சினை வேறெங்குள்ளது என Institute for Canadian Citizenship (ICC) வெளியிட்டுள்ள ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஆய்வின்படி, கனடாவில் நிரந்தர குடியிருப்பு பெற்றவர்களில் ஐந்தில் ஒருவர், 25 ஆண்டுக்குள் கனடாவை விட்டு வெளியேறிவிடுகிறார்.
குறிப்பாக, முனைவர் பட்டம் பெற்றவர்கள், பட்டம் பெற்ற பிற புலம்பெயர்வோரைவிட அதிக வேகத்தில் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என ஆய்வு கூறுகிறது.
ICC நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேனியல் பெர்னார்ட், திறன்மிகு புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் கல்வி மற்றும் தகுதிகளுக்கான அங்கீகாரத்தை கனடாவில் முறையாகப் பெற முடியாததால், அவர்கள் வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என தெரிவித்தார்.
அவர்களின் திறமை மற்றும் அனுபவத்தை நாடு சரியாகப் பயன்படுத்தாதது, கனடாவின் பொருளாதார நிலையை பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பலர் தங்கள் சொந்த நாடுகளில் ரயில்வே, கட்டுமானம், பொறியியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தவர்களாக இருந்தும், கனடாவில் பணிநிலை மற்றும் அங்கீகாரம் பெறுவதில் தடைகளை எதிர்கொள்கிறார்கள்.
“திறன்மிகு புலம்பெயர்ந்தோரை இழந்துவிட்டால், கனடா வளர்ச்சிக்கு அத்தியாவசியமான நிபுணத்துவத்தை இழக்க நேரிடும்,” என்று பெர்னார்ட் கூறினார்.
அதனால், இவ்வாறான திறமைகளை நாட்டில் தக்கவைத்துக்கொள்ள தேவையான கொள்கைகள் அவசரமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், புலம்பெயர்வோர் அமைப்பு “தடைசெய்யும் அமைப்பாக” அல்லாமல் “மனிதவள மேம்பாட்டு அமைப்பாக” மாற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
