பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை; தோல்விக்கு காரணம் இதுதான் - ரோஹித் சர்மா கவலை!
அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர்.
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்தாலும் 240 ரன்களைச் சேர்த்தது.
அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில் 64 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து ஷுப்மன் கில் 35 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விராட் கோலி, ஷிவம் தூபே, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் அக்ஸர் படேல் 44 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்திய அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெஃப்ரி வண்டர்சே 6 விக்கெட்டுகளையும், சரித் அசலங்கா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஜெஃப்ரி வண்டர்சே வென்றார்.
இந்நிலையில் இத்தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “நீங்கள் விளையாட்டில் தோற்றால் அது எப்போதும் வலியைக் கொடுக்கும். இது அந்த 10 ஓவர்கள் பற்றியது மட்டுமல்ல. நீங்கள் நிலையான கிரிக்கெட்டை விளையாட வேண்டும், இன்று நாங்கள் அதைச் செய்யத் தவறிவிட்டோம்.
இந்த தோல்வி கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், இது விளையாட்டின் ஒரு பகுதி என்பதால் இவைகள் நடக்கின்றன. உங்களுக்கு முன்னால் இருப்பதை நீங்கள் மாற்றியமைக்க வேண்டும். இன்றைய போட்டிக்கான பேட்டிங்கில் ஆர்டரில் நாங்கள் இடது-வலது பேட்டர்களை பயன்படுத்த நினைத்தோம்.
ஏனெனில் இடது - வலது பேட்டர்கள் களத்தில் இருக்கும் போது அது பந்துவீச்சாளருக்கு சற்று அழுத்தத்தை கொடுக்கும் என நாங்கள் உணர்ந்தோம். ஆனால் எங்கள் திட்டங்களை உடைத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெஃப்ரி வண்டர்சேவை பாராட்ட வேண்டும்.
இந்த போட்டியில் நான் 65 ரன்கள் எடுத்ததற்குக் காரணம் நான் பேட்டிங் செய்த விதம்தான். நான் அப்படி பேட்டிங் செய்யும்போது, நிறைய ரிஸ்க்கை எடுத்துதான் விளையாடுகிறேன்.
அப்படி நீங்கள் விளையாடியும் உங்களால் இலக்கை எட்டமுடியவில்லை என்றால் அது எப்போதும் ஏமாற்றத்தை கொடுக்கும். எனது நோக்கத்தில் நான் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை.
இந்த மேற்பரப்பின் தன்மையை நாங்கள் புரிந்துகொள்கிறோம், இங்கு மிடில் ஓவர்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும்.
அதனால் பவர்பிளே ஓவர்களில் முடிந்தவரை ரன்களைச் சேர்க்க முயற்சிக்க வேண்டும், இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் போதுமான அளவு சிறப்பாக செயல்படவில்லை.
நாங்கள் எப்படி விளையாடினோம் என்பது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் மிடில் ஓவர்களில் எங்கள் பேட்டிங் பற்றி நிச்சயம் நாங்கள் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |