விஜய் ஹசாரே டிராபியில் வரலாறு படைத்த முதல் வீரர்... மூன்று சீசன்களில் 600+ ரன்கள்!
ஜார்க்கண்டுக்கு எதிராக 147, கேரளாவிற்கு எதிராக 124, புதுச்சேரிக்கு எதிராக 113, திரிபுராவிற்கு எதிராக 108 ரன்கள் என நான்கு சதங்களை அடித்து தனது ஆட்டத்தை படிக்கல் உச்சத்திற்கு கொண்டு சென்றார்.
கிரிக்கெட் வரலாற்றில் புதிய பக்கத்தைத் திறந்துள்ளார் கர்நாடகா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல். விஜய் ஹசாரே டிராபி 2025-26 சீசனில், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 82 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தபோது, அவர் இந்தச் சீசனில் 605 ரன்களைக் கடந்தார். இதன்மூலம், விஜய் ஹசாரே டிராபியின் வரலாற்றில் மூன்று வெவ்வேறு சீசன்களில் 600 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரராக பெயரெழுதியுள்ளார்.
படிக்கல் தனது சாதனைப் பயணத்தை இந்த சீசனில் அற்புதமான முறையில் தொடங்கினார் — ஜார்க்கண்டுக்கு எதிராக 147, கேரளாவிற்கு எதிராக 124, புதுச்சேரிக்கு எதிராக 113, திரிபுராவிற்கு எதிராக 108 ரன்கள் என நான்கு சதங்களை அடித்து தனது ஆட்டத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றார்.
இதற்கு முன்பே, 2019-20 சீசனில் 609 ரன்களும், 2020-21 சீசனில் 737 ரன்களும் அடித்திருந்த படிக்கல், தற்போது 2025-26 சீசனில் 605 ரன்களுடன், மூன்றாவது முறையாக 600+ ரன்களை எட்டியுள்ளார். இதுவரை விஜய் ஹசாரே டிராபியில் இரண்டு முறை 600+ ரன்கள் குவித்தவர்கள் சிலர் இருந்தாலும், மூன்று சீசன்களில் இந்த மைல்கல்லைத் தொட்டவர் படிக்கல் மட்டுமே.
இந்த அபார ஃபார்மில் உள்ள படிக்கல், கர்நாடகா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், நாராயண் ஜெகதீசன் படைத்த ஒரு சீசனில் 830 ரன்கள் என்ற சாதனையையும் முறியடிக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில், அந்த சாதனைக்கு இன்னும் 226 ரன்கள் தேவைப்படுகிறது.
இந்திய அணிக்காக ஏற்கனவே 2 டெஸ்ட், 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள படிக்கல், தனது நிலையான செயல்திறன் மூலம் தேசிய அணியில் திரும்பவும் இடம்பிடிக்க வலுவான வாய்ப்பை உருவாக்கியுள்ளார். அவரது இந்த சாதனை, டொமெஸ்டிக் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தையும், தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தின் மதிப்பையும் உலகுக்கு நினைவூட்டுகிறது.
