சம்பந்தனின் பூதவுடலுக்கு புதனன்று பாராளுமன்றத்தில் அஞ்சலி

1933ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி பிறந்த ராஜவரோதியம் சம்பந்தன், ஆர். சம்பந்தன் என அனைவராலும் அறியப்பட்டவர்.

Jul 1, 2024 - 18:38
சம்பந்தனின் பூதவுடலுக்கு புதனன்று பாராளுமன்றத்தில் அஞ்சலி

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனின் உடல் இன்று (01) காலை பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (30) இரவு காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 91.

1933ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி பிறந்த ராஜவரோதியம் சம்பந்தன், ஆர். சம்பந்தன் என அனைவராலும் அறியப்பட்டவர்.

யாழ்ப்பாணம் புனித பேட்ரிக் கல்லூரியில் அடிப்படைக் கல்வியைப் பயின்ற அவர் மேலும் பல பாடசாலைகளில் பயின்றார்.

தொழில் ரீதியாக சட்டத்தரணியான இவர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.

1977 முதல் 1983 வரையிலும், 1997 முதல் 2000 வரையிலும், 2001 முதல் இறக்கும் வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது 3 வருட காலத்திற்கு ஆர். சம்பந்தனும் நாட்டின் நாடாளுமன்றத்தின் 14ஆவது எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பிய ஆர். சம்பந்தன் இந்நாட்டின் தமிழ் அரசியல் இயக்கத்தில் ஒரு முக்கிய மற்றும் தீர்க்கமான காரணியாக இருந்தார்.

இதற்கிடையில், ஆர். சம்பந்தனின் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையர்களுக்காக உழைத்த ஆர். சம்பந்தன் அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமைகளைப் பெறுவதற்கான நம்பிக்கையின் விளக்காக இருந்தார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சம்பந்தனின் மறைவு இந்நாட்டின் அரசியல் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என அவரது X தளத்தில் பதிவு செய்யப்பட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்;

“நாளை (02) முழுவதும் ஆர். சம்பந்தனின் பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் புதன்கிழமை (03) அவரது பூதவுடல் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

அவரது பூதவுடல் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும், இறுதிக் கிரியைகள் இடம்பெறும் திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், எனினும் ஞாயிற்றுக்கிழமை (07) இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதாக நம்புகிறோம்” என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!