கம்பீரின் ஓய்வறை திட்டத்தை செயற்படுத்தும் சுப்மன் கில்... இதுதான் கேப்டன்சியா? முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள்!

இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வில் எந்தவித நாட்டமும் இல்லாமல், திட்டமிடல் இல்லாமல் சுப்மன் கில் செயல்படுகிறார் என்று விமர்சிக்கப்படுகிறது.

கம்பீரின் ஓய்வறை திட்டத்தை செயற்படுத்தும் சுப்மன் கில்... இதுதான் கேப்டன்சியா? முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அபார ஆட்டத்தின் காரணமாக மகத்தான வெற்றியைப் பெற்றது.

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில்லின் மோசமான ஆட்டம் மற்றும் கேப்டன்சியில் எடுத்த தவறான முடிவுகள் ஆகியவை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் கம்பேக் காரணமாக இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தாலும், புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

கேப்டனான பிறகு பொறுப்புடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுப்மன் கில் பொறுப்பின்றி ஆட்டமிழந்தது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து அவர் 43 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். ஏற்கனவே, வெளிநாட்டு மைதானங்களில் கில்லுக்கு விளையாடத் தெரியாது என்ற விமர்சனங்கள் இருந்த நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில், பிட்ச்சில் கொஞ்சம் ஸ்விங் அல்லது வேகம் இருந்தால், அவர் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்துவிடுவார் என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளன. ஆஸ்திரேலிய மண்ணில் சுப்மன் கில்லின் சாதனை படுமோசமாக இருக்கும் நிலையில், புதிய பொறுப்பு கிடைத்த பின் அது இன்னும் மோசமாகி இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வில் எந்தவித நாட்டமும் இல்லாமல், திட்டமிடல் இல்லாமல் சுப்மன் கில் செயல்படுகிறார் என்று விமர்சிக்கப்படுகிறது.

முதல்நிலை ஸ்பின்னர் இல்லாமல் எப்போதும் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியதே இல்லை. ஆனால், பயிற்சியாளர் கம்பீரின் ஆதிக்கம் காரணமாக சுப்மன் கில், அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் களமிறங்கிவிட்டார். குல்தீப் யாதவின் தேவை குறித்து இந்தியாவே ஒரே குரலில் வலியுறுத்திய போதும், கில் செவி சாய்க்கவில்லை என்று தெரிகிறது. இறுதியாக, கடைசிப் போட்டியில் குல்தீப் யாதவை அணியில் கொண்டு வந்த பின்னரே இந்திய அணி வெற்றி பெற்றது.

சுப்மன் கில்லுக்கு இன்னும் வீரர்களின் திறமையை மதிப்பிடத் தெரியாமல் திணறி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹர்சித் ராணா எப்போதும் மிடில் ஓவர்களில் பந்துவீசக் கூடியவர். ஆனால், அவருக்கு ஓபனிங் ஸ்பெல்லை கொடுக்க கில் முடிவு செய்தது ஏன் என்பது தெரியவில்லை. மாறாக, நல்ல வேகம் இருக்கக்கூடிய பிரசித் கிருஷ்ணாவை தாமதமாக அட்டாக்கில் கொண்டு வந்திருக்கிறார்.

பயிற்சியாளர் கம்பீர் ஓய்வறையில் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் மட்டுமே குறியாக இல்லாமல், சுப்மன் கில் பிட்ச் மற்றும் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். அடுத்தடுத்த தொடர்களில் கில் இந்த விஷயத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், கேப்டன்சி பொறுப்பே அவருக்கு மிகப்பெரிய சிக்கலாகிவிடும் என்று பார்க்கப்படுகிறது.