ஆசிய கோப்பை பரிசுத் தொகையை விடப் பல மடங்கு அதிகம்....  ஹர்திக் பாண்டியா.. வாட்ச் விலை கேட்டு மிரளும் ரசிகர்கள்!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா அணிந்திருந்த ஒரு வாட்ச் கிரிக்கெட் உலகையே தலைசுற்ற வைத்துள்ளது.

ஆசிய கோப்பை பரிசுத் தொகையை விடப் பல மடங்கு அதிகம்....  ஹர்திக் பாண்டியா.. வாட்ச் விலை கேட்டு மிரளும் ரசிகர்கள்!

துபாய்: 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்ல தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா அணிந்திருந்த ஒரு வாட்ச் கிரிக்கெட் உலகையே தலைசுற்ற வைத்துள்ளது.

இந்த வாட்ச்சின் விலை, ஆசிய கோப்பை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை விடப் பல மடங்கு அதிகம் என்பதுதான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ள தகவல்.

சமீபத்திய பயிற்சி அமர்வின்போது, ஹர்திக் பாண்டியா 'ரிச்சர்ட் மில் RM 27-04' (Richard Mille RM 27-04) என்ற மாடல் வாட்சைக் கட்டியிருந்தார். பிரபல வாட்ச் நிபுணர்களின் கணிப்புப்படி, இந்த வாட்ச்சின் இந்திய மதிப்பு சுமார் 18 கோடி ரூபாய் ஆகும். இந்த வாட்ச், டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீரரான ரஃபேல் நடாலுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு தயாரிப்பு பதிப்பாகும். 

உலகம் முழுவதும் இந்த பதிப்பில் வெறும் 50 வாட்சுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால், இது உலகின் மிகவும் அரிதான மற்றும் மதிப்புமிக்க வாட்சுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த வாட்ச்சில் அப்படி என்ன சிறப்பு?

எடை குறைவு: 'ரிச்சர்ட் மில் RM 27-04' மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் உருவானது. இதன் மொத்த எடையே வெறும் 30 கிராம்தான். ஆனால், வலிமையில் இது ஒரு பாறைக்குச் சமம்.

அதிர்வுகளைத் தாங்கும் சக்தி: இந்த வாட்ச்சின் இயந்திரம், 12,000 g's-க்கும் அதிகமான சக்தியைத் தாங்கும் திறன் கொண்டது. இது அந்த பிராண்டின் சாதனையாகும். டென்னிஸ் விளையாடும்போது ஏற்படும் அதிவேக அதிர்வுகளைத் தாங்கும் வகையிலேயே இது நடாலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனித்துவமான வடிவமைப்பு: ஒரு மெல்லிய ஸ்டீல் கேபிளால் உருவாக்கப்பட்ட வலைப்பின்னல் அமைப்பின் மீது, இந்த வாட்ச்சின் இயந்திரம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 28 அன்று முடிவடையும் 2025 ஆசிய கோப்பை தொடரில், வெற்றி பெறும் அணிக்கு சுமார் 300,000 அமெரிக்க டாலர்கள் (தோராயமாக 2.6 கோடி ரூபாய்) பரிசுத் தொகையாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 150,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும். 

ஒரு முழு அணியும் வெல்லும் இந்த 2.6 கோடி ரூபாய் பரிசுத் தொகையால், ஹர்திக் பாண்டியாவின் ஒரு வாட்சைக்கூட வாங்க முடியாது என்பதுதான் ஆச்சரியமான உண்மை. ஏற்கனவே, ஆசியக் கோப்பையை சுவாரசியம் இல்லாத தொடர் எனப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அந்த கோப்பை வென்றால் கிடைக்கும் பரிசுத் தொகையை விட சுமார் ஏழு மடங்கு அதிக மதிப்புடைய வாட்ச்சை அணிந்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங்.