ஆசியக் கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல் - இந்திய அணிக்கு கபில்தேவ் அட்வைஸ்!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறுகிறது.

ஆசியக் கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல் - இந்திய அணிக்கு கபில்தேவ் அட்வைஸ்!

துபாய்: ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறுகிறது. இரு நாடுகளுக்குமிடையேயான போர் பதற்றத்திற்குப் பிறகு, கிரிக்கெட் களத்தில் இந்த அணிகள் மீண்டும் மோதுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், இந்திய அணி வீரர்களுக்குக் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், வீரர்கள் தங்கள் பணியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அவர், "யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். நீங்கள் உங்கள் பணியை செய்யுங்கள்," என்று தெரிவித்துள்ளார்.

கபில்தேவ் மேலும் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய போட்டி காத்துக் கொண்டிருக்கிறது. இந்திய அணி வீரர்கள் அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்," என்று வலியுறுத்தினார். 
"உங்களுடைய செயல்பாடுகளில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டாம். களத்திற்குச் சென்று வெற்றி பெறுங்கள். மற்ற விஷயங்களை எல்லாம் அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். உங்களுடைய பணியை நீங்கள் செய்யுங்கள்," என்றும் அவர் இந்திய வீரர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.

ஒரு நாட்டுக்கு சில கொள்கைகள் இருக்கும் என்றும், "நாடு இந்த போட்டி நடைபெற வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இது நடக்கட்டும். இல்லை வேண்டாம் என்று நினைத்தால் வேண்டாம். ஆனால் இது தொடர்பாக அரசு ஏற்கனவே தங்களது கொள்கை முடிவை அறிவித்துவிட்டது. இதனால் வீரர்கள் தங்களது பணியை செய்ய வேண்டும்," என்றும் கபில்தேவ் விளக்கமளித்துள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் இளம் திறமைசாலிகள் களமிறங்குவதால் இந்திய அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.