அணியில் அரசியல் செய்ய மாட்டேன்... கிரிக்கெட் ஒன்றும் உங்கள் குடும்ப சொத்து இல்லை... கம்பீர் அதிரடி பேச்சு
எனக்கு அணியில் அரசியல் செய்வதில் நம்பிக்கை இல்லை. நான் இங்கு அணியை உருவாக்க வந்திருக்கின்றேன்.

தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்ட பின்னர் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து படு தோல்வியை தழுவி வந்த நிலையில், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.
எனினும், டெஸ்ட் போட்டிகளில் இந்தியா சரியாக விளையாடாத நிலையில் கம்பீரை பதவியை நீக்க வேண்டும் என்று பலரும் கூறிய நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தது.
தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், கம்பீர் எந்த வித கிரிக்கெட் தொடர்பான பணியிலும் ஈடுபடாமல் ஓய்வில் உள்ளார்.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கம்பீர் கேள்விகளுக்கு பதில் வழங்கினார்.
“பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் போது என்னுடைய பயணத்தில் ஏற்றுத்தாழ்வு இருக்கும் என்று தெரியும். என்னுடைய பணி நாட்டிற்கு பெருமை சேர்ப்பது தான், சிலர் 25 ஆண்டுகளாக ஏசி அறையில் அமர்ந்து கொண்டு கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் இந்திய கிரிக்கெட் தங்களுடைய குடும்ப சொத்து என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் என் நாட்டு மக்களுடைய சொத்து.
நான் சாதாரண ஒரு கிளப் அல்லது ஒரு உள்ளூர் அணியின் பயிற்சியாளர் கிடையாது. எனக்கு அணியில் அரசியல் செய்வதில் நம்பிக்கை இல்லை. நான் இங்கு அணியை உருவாக்க வந்திருக்கின்றேன்.
சிலர் எனக்கு பரிசுத் தொகை கிடைத்தது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களெல்லாம் இந்தியாவில் சம்பாதித்து இங்கு வரி கட்ட வேண்டும் என்பதற்காக வெளிநாட்டில் சென்று குடியேறி இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் கிரிக்கெட் ஒன்றும் உங்க அப்பன் வீட்டு சொத்து கிடையாது. நீங்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு சென்று விடுவீர்கள். நான் இந்தியாவில் இருந்து என்னுடைய வரிப்பணத்தை செலுத்துவேன்” என்றார்.