சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் நகை, வாகனம் உள்ளிட்ட சொத்துகளை பறிமுதல் செய்யும் பிரித்தானியாவின் புதிய திட்டம்
பிரித்தானியா, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரின் தங்குமிட செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அவர்களிடம் உள்ள விலையுயர்ந்த தனிச்சொத்துகளை பறிமுதல் செய்யும் புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
பிரித்தானியா, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரின் தங்குமிட செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அவர்களிடம் உள்ள விலையுயர்ந்த தனிச்சொத்துகளை பறிமுதல் செய்யும் புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
திருமண மோதிரங்களைத் தவிர, நகைகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், பிற பெறுமதியான பொருட்கள் ஆகியவை இந்த பறிமுதல் நடவடிக்கையில் அடங்கும் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
2019 முதல் இன்று வரை, சட்டவிரோத புலம்பெயர்வுக்கு பிரித்தானியா சுமார் 15 பில்லியன் டாலர்கள் செலவிட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சில புகலிடக்கோரிக்கையாளர்கள், பிரித்தானியாவின் செலவில் தங்கியிருப்பதுடன், விலையுயர்ந்த கார்கள் போன்ற சொத்துகளையும் வைத்திருப்பது அரசுக்கு கூடுதல் சுமையாக உள்ளது.
இதனால், பொது மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அந்த புலம்பெயர்ந்தோரின் மதிப்புள்ள சொத்துகளையே அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்யும் திட்டத்தை உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் முன்னெடுத்து வருகிறார். இந்த திட்டத்தில் நெக்லஸ்கள், கைக்கடிகாரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை சேர்க்கப்படுகின்றன.
சட்டப்படி பிரித்தானியாவுக்கு வந்து ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டவர்களின் கார்கள் கூட பறிமுதல் செய்யப்படலாம். மேலும், சட்டவிரோதமாக நுழைந்து உணவு டெலிவரி போன்ற வேலைகளை செய்து வரும் நபர்களின் மின்சார பைக்குகளும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, அவற்றை விற்று அவர்களது தங்குமிடச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
மொத்தத்தில், நாட்டில் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்கும் வகையில் கடுமையான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் தொடர்ச்சியான திடீர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதைக் காட்டுகிறது.
