தொடரை விட்டு கிட்டத்தட்ட வெளியேறியது இலங்கை.. பேட்டிங்கில் தடுமாறிய பாகிஸ்தான்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இரு அணிகளும் தங்களுடைய முதல் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியிருந்ததால், இந்த ஆட்டம் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் விதமாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.
அபுதாபியில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் நிசாங்க மற்றும் குஷல் மெண்டிஸ் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். மேலும், குசல் பெரேரா மற்றும் அசலங்க ஆகியோரும் பெரிய ஸ்கோரை எடுக்க முடியாமல் ஆட்டம் இழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், கமிந்து மெண்டீஸ் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், ஹசரங்க 15 ரன்களும், சமீரா கருணரத்ன 17 ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது.
பந்துவீச்சில் பாகிஸ்தான் தரப்பில், ஷாகின் ஆபிடி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சுழற் பந்துவீச்சாளர் அப்ரார் அகமத் நான்கு ஓவர்கள் வீசி வெறும் எட்டு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ஃபர்கான் அதிரடியாக விளையாட முற்பட்டு, ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தீக்ஷன பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான பக்கர் சமான் 17 ரன்களில் வெளியேறினார். சையிம் அயூப் இரண்டு ரன்களிலும், கேப்டன் சல்மான் ஆகா ஐந்து ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி 57 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது ஹாரிஸ் 13 ரன்களில் வெளியேறினார்.
இதனை அடுத்து, ஆல்ரவுண்டர்களான உசைன் தலாட் மற்றும் முஹமது நவாஸ் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டது. இந்த ஜோடி விக்கெட்டுகளைக் கொடுக்காமல், பவுண்டரி மற்றும் சிங்கிள்ஸ் மூலம் அணியின் ஸ்கோர் வேகத்தை நிதானமாக நடத்தியது.
முஹமது நவாஸ் 24 பந்துகளில் 38 ரன்கள் (மூன்று சிக்சர், 3 பவுண்டரி) எடுத்தார். ஹுசைன் தலாட் 30 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில், பாகிஸ்தான் அணி 18 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக அடைந்த தோல்வியிலிருந்து மீண்டு வந்திருக்கின்றது.
பாகிஸ்தானின் வெற்றியால், இலங்கை அணி தொடரை விட்டு கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது.
