PhD பட்டதாரிகளுக்கான விசா : பிரித்தானிய விசா கொள்கையில் முக்கிய மாற்றம்!
இந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், பிரித்தானியாவின் விசா கொள்கையில் ஒரு முக்கிய மாற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவில் PhD பட்டதாரிகளுக்காக வழங்கப்பட்டு வரும் விசா சம்பள தள்ளுபடி விதிகளை நீக்க வேண்டும் என அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன. PhD பட்டம் பெற்றவர்கள் ஏனைய திறமையான தொழிலாளர்களைவிட குறைவான சம்பளம் பெறுகின்றனர் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என Migration Advisory Committee (MAC) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, Skilled Worker Visa திட்டத்தின் கீழ் PhD பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சம்பள தள்ளுபடி விதிகள் தேவையற்றவை என MAC கருதுகிறது. தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில், PhD பட்டதாரிகளும் ஏனைய Skilled Worker விசா பயனாளிகளும் சம்பள ரீதியாக பெரிதான வேறுபாடின்றி இருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
புதிய பரிந்துரைகளின்படி, புதிய பட்டதாரிகளுக்கான ஒரே குறைந்தபட்ச சம்பள அளவாக ஆண்டுக்கு 33,400 பவுண்டு நிர்ணயிக்கப்பட வேண்டும் என MAC கூறியுள்ளது. போஸ்ட்-டாக்டரல் பணிகளுக்கான குறைந்தபட்ச சம்பளம் 41,700 பவுண்டாக இருக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனுடன், STEM மற்றும் non-STEM PhD பட்டதாரிகளுக்கென தனித்தனியாக வழங்கப்பட்டு வந்த சம்பள தள்ளுபடி விதிகள் முழுமையாக நீக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள், விசா முறையை மேலும் எளிமைப்படுத்துவதுடன், திறமையான தொழிலாளர்களுக்கு நியாயமான மற்றும் ஒரே மாதிரியான சம்பள அளவை உறுதிப்படுத்தும் என MAC வலியுறுத்தியுள்ளது. மேலும், PhD மற்றும் உயர் கல்வி பெற்ற பட்டதாரிகள் நீண்டகாலத்தில் பிரித்தானியா நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவார்கள் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், பிரித்தானியாவின் விசா கொள்கையில் ஒரு முக்கிய மாற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
