போராடும் 7 அணிகள்... பிளே ஆஃப் செல்லும் 4 அணிகள்.. எத்தனை போட்டிகளில் வெற்றிப்பெற வேண்டும்?
நடப்பு தொடரில் இன்னும் 13 போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், சுமார் 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற கடுமையாகப் போராடி வருகின்றன.

ஐபிஎல் 2025 தொடரில் இன்று சனிக்கிழமை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
நடப்பு தொடரில் இன்னும் 13 போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், சுமார் 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற கடுமையாகப் போராடி வருகின்றன.
குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் முதல் 4 இடங்களைப் பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதுடன், இதுவரை எந்த அணியும் பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்யவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டன.
இந்த நிலையில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணிக்கு பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்ய இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை. மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் கூட, அவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடுவார்கள்.
ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்ய மீதமுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் போதும். மூன்று வெற்றி பெற்றால், முதல் இரண்டு இடங்களுக்குள் வரலாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், 11 போட்டிகளில் 15 புள்ளிகளுடன் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, மீதமுள்ள 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேற, இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு செய்தால், அவர்கள் நிச்சயமாக தகுதி பெறுவார்கள். ஒரு போட்டியில் தோற்றால் கூட மற்ற அணிகளின் முடிவுகளைச் சார்ந்திருக்க வேண்டும்.
11 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி, மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 19 புள்ளிகளைப் பெறலாம். எனினும், அவர்கள் மோதவுள்ள அனைத்து அணிகளும் புள்ளிப்பட்டியலில் அவர்களை விட மேலே உள்ளன. மும்பைக்கு எதிரான வெற்றியுடன், குஜராத் அல்லது பஞ்சாப் அணிகளில் ஒன்றுக்கு எதிரான வெற்றியும் கிடைத்தால், டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வாய்ப்பு உள்ளது.
மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றால் மட்டுமே அதிகபட்சமாக 15 புள்ளிகளைப் பெற முடியும் என்பதுடன், நடப்பு சாம்பியன்களான இவர்களுக்கு மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டும்.
ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, 16 புள்ளிகளை எட்ட மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அத்துடன், மற்ற போட்டிகளின் முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக அமைய வேண்டும்.